கடந்த இரு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. இதனால், தமிழகத்தில் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மேலும், அண்ணாசாலை, அடையாறு, பூந்த மல்லி நெடுஞ்சாலை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை என்று மெயின் ரோடுகளும் உள்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கி இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நவம்பர் 3-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களை ஒரு மணி நேரத்துக்கு முன்பே வீட்டுக்கு அனுப்ப, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'சென்னையில் கனமழை பெய்துவருவதால், பள்ளி மாணவர்களை ஒரு மணி நேரத்துக்கு முன்பே வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பள்ளி மாணவர்களை ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வீட்டிற்கு அனுப்ப அனைத்துப் பள்ளிகளுக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பள்ளிகள் இப்போதே வகுப்புகளை நிறுத்திவிட்டு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வருகின்றன. நாளை பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.