தீக்குச்சிகளை பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் திருடி வந்த 27 வயது இளைஞர் அமீர் கான் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பழைய சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் மக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அமீர் கான் திருடியுள்ளார்.
இதற்கு அமீர் கான் பயன்படுத்திய ஆயுதம் தீக்குச்சி. ஏடிஎம் மையங்களில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குச்சியின் முனையை கூர் தீட்டி அதனை நம்பர்கள் இருக்கும் பட்டன்களுக்கு இடையே வைத்து விட்டு வெளியே காத்திருப்பாராம். பணம் எடுக்க யாரேனும் வந்ததும், அவர்களுக்கு பின்னால் பணம் எடுப்பவர் போன்று அமீர் கான் நின்று கொள்வார். கார்டை உள்ளே செலுத்தி "பின்" நம்பரை அழுத்தும் போது அந்த பட்டன்கள் வேலை செய்யாது. ஏனெனில், ஏற்கனவே அதனுள் யாருக்கும் தெரியாமல் தீக்குச்சியை அமீர் கான் சொருகி வைத்திருப்பார்.
இந்த சமயத்தில், தனக்கு அவரசரமாக பணம் எடுக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு உதவுவது போல் பின்னால் சென்று நின்று கொள்வார் அமீர் கான். பதட்டத்தில் அவர்கள் மீண்டும் "பின்" நம்பரை அழுத்தும் போது, எந்த நம்பரை அவர்கள் அழுத்துகிறார்கள் என அமீர்கான் பார்த்து வைத்துக் கொள்வார். பின்னர், பட்டன் வேலை செய்யவில்லை என்று அவர்கள் வெளியே செல்லும் போது, தானும் அவர்கள் கூடவே வெளியே வந்து விடுவார். பின்னர், மீண்டும் ஏடிஎம் மையத்திற்கு வந்து, தான் சொருகி வைத்திருக்கும் தீக்குச்சியை எடுத்து விட்டு, தான் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் வாடிக்கையாளரின் "பின்" நம்பரை அழுத்தி தனக்கு வேண்டிய பணத்தை அமீர்கான் எடுத்துக் கொள்வார். ஆனால், அதிக தொகையை அவர் எடுப்பதில்லை.
தொடர்ந்து, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அமீர்கான் குறித்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தொழிநுட்ப உதவி மற்றும் பல்வேறு உதவிகளுடன் அமீர்கானை போலீசார் கைது செய்துள்ளனர்.
நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அமீர்கான், தன்னுடைய இளம் வயதில் கெட்ட நண்பர்களுடன் பழகியதாகவும், ஏடிஎம்-ல் திருடும் இந்த நூதன முறையை அண்மையில் கற்றுக் கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவரது கூட்டாளிகள் சிலரது பெயரையும் போலீசில் அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.