ரஜினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இயக்குநர் கஸ்தூரி ராஜா, 2012ஆம் ஆண்டு என்னிடம் கடன் வாங்கினார். ‘நான் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றாலும், என்னுடைய சம்பந்தி ரஜினிகாந்த் திருப்பிக் கொடுத்துவிடுவார்’ என்று அப்போது எழுதிக் கொடுத்து கடன் வாங்கினார். பின்னர், காசோலையாக கடன் தொகையை திருப்பிக் கொடுத்தார் கஸ்தூரி ராஜா. ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லையென அந்தக் காசோலை திரும்பி வந்துவிட்டது.

எனவே, கஸ்தூரி ராஜா மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தேன். மேலும், ரஜினி வீட்டைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்னேன். ஆனால், ‘பல பேர் அவர் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்று அங்கிருந்து பதில் வந்தது. இதனால், ‘ரஜினி பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துவிட்டார்’ என கஸ்தூரி ராஜா மீது போலீஸில் புகார் செய்தேன். ஆனால், அவர்களோ இது சிவில் பிரச்னை என்று சொல்லிவிட்டனர்.

இதற்கிடையில் ‘மேன் ஹூன் ரஜினிகாந்த்’ படத்துக்குத் தடைகேட்டு ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, ‘என் பெயரைப் பயன்படுத்த நான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை’ என்று கூறியிருந்தார். இதை முன்பே அவர் சொல்லியிருந்தால், கஸ்தூரி ராஜா மீது நான் கொடுத்த புகாரை ‘சிவில் பிரச்னை’ என போலீஸார் சொல்லியிருக்க மாட்டார்கள்.

என் பிரச்னை தெரிந்தும், கஸ்தூரி ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ரஜினிகாந்த். எனவே, இருவரும் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இதனால், ‘தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திய சம்பந்து கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதுடன், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

×Close
×Close