பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கூல் லிப்’ என்னும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகி வருவதாகவும் இந்த தடை செய்யப்பட்ட பொருளுக்கு ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்படுகிறது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி பரத சக்ரவர்த்தி, ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை விசாரணை செய்து வருகிறார். இதில், இதில் மாணவர்கள் இளைஞர்கள், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, ஹேன்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை, போதைப் பொருட்களை பயன்படுத்தியதாகவும் ‘கூல் லிப்’ என்ற குட்கா பொருளை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுபோன்ற வழக்குகள் தொடர்ச்சியாக வருவதால், இன்று காலை நீதிபதி பரத சக்ரவர்த்தி, மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்களை நீதிமன்ற அறைக்கு வரும்படி அழைத்திருந்தார். அப்போது, தமிழகத்தில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில், ஜாமீன் கோரி பல மனுக்கள் வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இதில் அடிமையாகி வருகிறார்கள் என்பது தெரிகிறது என்று நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறினார்.
மேலும், “இளம் தலைமுறையின் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது. குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம். இத்தகைய போதைப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது.” என்று நீதிபதி பரத சக்ரவர்த்தி வேதனை தெரிவித்தார்.
இதில் கருத்து தெரிவித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, “தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இதனை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என்று என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது.” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த ‘கூல் லிப்’ஐ பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து இந்தியா முழுவதும் கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்று மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் அரசுகளிடம் கேட்டு உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பரத சக்ரவர்த்தி இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதி ஒத்தி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“