சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூர் என்ற இடத்தில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டு ஜுன் மாதம் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின.
அங்கு இரண்டாம் கட்ட அகழ்வாய்வின்போது கிடைத்த பொருட்களின் தொடர்ச்சியாக, மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 3-ம் கட்ட அகழாய்வு தொடங்கிய நிலையில் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாளராக ஸ்ரீராமன் நியமனம் செய்யபட்டார்.
அவரது கண்காணிப்பில், முந்தைய இரு கட்டங்களின்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை ஒட்டி, 3ம் கட்ட அகழாய்வு 400 சதுர மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 2-ம் கட்ட அகழ்வாய்வின்போது கிடைத்த பொருட்களின் தொடர்ச்சி 3-ம் கட்ட ஆய்வில் கிடைக்கவில்லை என்பதால், வருகிற 30-ம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் அண்மையில் சில நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மூன்றாம் பருவ அகழாய்வில் 1800க்கும் மேற்பட்ட தொல்பெருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 1500க்கும் மேற்பட்டவை மணிகளாகவே உள்ளன. மொத்த மணிகளில் 90 சதவிகிதம் கண்ணாடியில் செய்யப்பட்டவை. மீதமுள்ளவை சூதுபவளம், பளிங்கு, பச்சைக்கல் மற்றும் சுடு மண்ணில் செய்யப்பட்டவை. சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், ஐந்து தங்கப் பொருட்கள், ஒரு சில மண்ணுருவங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. நான்காம் பருவ அகழாய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பிரிவு மற்றும் தமிழகத் தொல்லியல் துறையின் மூலமாக வரைவுத் திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த முடிவினை இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையிடம் அறிவிக்கும். அருங்காட்சியகம் அமைத்தல் மற்றும் கட்டுமானங்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளிக்கொணர்தலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படியும், அறிவுறுத்தலின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, கீழடி அகழ்வாராய்ச்சியில் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்களை, பெங்களூருவிலுள்ள அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்ல தொல்லியல்துறை முடிவெடுத்திருந்தது. அதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை அதில் காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கீழடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கண்காணிப்பாளராக அமர்நாத் இருந்த போது, பணிகள் விரைவாக நடைபெற்றன. இப்போது, ஸ்ரீராமன் வந்த பிறகு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை மாற்ற வேண்டும் என நீதிபதிகளிடம் கீழடி ஆய்வு பணிகளுக்கு நிலம் கொடுத்த சந்திரன் என்பவர் புகார் அளித்தார்.