2020 டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவில், 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்கான தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (ஜூலை 20) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசு தரப்பில், ஜனவரி 2020-ல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆங்கில வழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா? என கேள்வி எழுப்பினர். அப்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர்கின்றனர் அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், 2020 டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவிலிருந்து 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"