Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் அநியாய கட்டணம் : டாக்டர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

சிதம்பரத்தில் போராடும் மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
doctors protest, annamalai university medical college, fees hike, dr g.r.raveendranath

கல்விக் கட்டணத்தைக் குறைத்திடக்கோரி சிதம்பரத்தில் போராடும் மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisment

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் .ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை...

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கல்விக் கட்டணத்தை , சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கும் நிர்ணியிக்க வேண்டும்.கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம், மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என, மாணவர்கள் போராடிவருகிறார்கள்.அவர்களை அழைத்துப் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்.

கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க மத்திய அரசு அவசரச் சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும். இந்த ஆண்டிற்கு தமிழகத்திற்கு கூடுதலாக 2600 எம்.பி்.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

doctors protest, annamalai university medical college, fees hike, dr g.r.raveendranath டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும். தமிழக அரசின் ஒதுக்கீட்டு இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வழங்கிட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடைமுறையில் உள்ளது போல், தமிழக அரசின் ஒதுக்கீட்டு UG,PG & உயர் சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக மாணவர்களுக்கு மட்டுமே வழங்கிட அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ இடங்களுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அரசு சாரா, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், ஆண்டு வருமானம் ரூ 12 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கல்விக் கட்டணத்தை மத்திய - மாநில அரசுகளே செலுத்த வேண்டும்.

டிப்ளமோ மருத்துவப் படிப்புகளில் தொலைதூர மற்றும் கடினமான (Remote and Difficult)பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்களைச் செய்து, அவ்வொதிக்கீட்டை வழங்கிவருவது போல் , கிராமப்புற, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காட்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய இந்திய மருத்துவக் கழத்தின் விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

தொலைதூர மற்றும் கடினமான (Remote and Difficult)பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதலாக 30 விழுக்காடு வரை மதிப்பெண்கள் வழங்கிட, இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது போல், கிராமப்புற, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். இதன் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போன்றவற்றில் இம்மாணவர்கள் அதிக இடங்களைப் பெற முடியும்.

எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் நீட் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.அவற்றிற்கு தனியாக நுழைவுத்தேர்வு நடத்திடக்கூடாது. தனியார் மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

முதுநிலை மருத்துவக் கல்வியிலும், உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட , இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும். நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்த பட்ச மதிப்பெண் நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12.09.2017 அன்று மாலை 4.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறியிருக்கிறார்.

Annamalai University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment