தனியார் பொறியியல் கல்லூரிகள் இடப்பகிர்வு கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

உங்களுக்கே அனைத்து இடங்களும் வேண்டும் என்றால், தனியாக ஒரு வழக்கு தொடருங்கள்

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களையும் கலந்தாய்வு மூலம் அரசு நிரப்புகிறது. 2007 முதல் 2016 வரையில் கலந்தாய்வு முடியும் போது லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்கள் கடைசி நேரத்தில் திருப்பி அளிக்கப்படுகின்றன.

இதனால் கல்லூரிகளுக்கும், அரசுக்கும் இடையிலான இடபகிர்வு முறையை மாற்றி அமைக்கவும், அதுவரை பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் கோரி திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில், தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால், அந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு இல்லாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகளே நிரப்ப அரசு அனுமதி கோர நேற்று நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தனியார் கல்லூரிகளால் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டண சலுகை உள்ளிட்ட அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என அரசிடம் முறையிடவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சலுகைகளை, நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் வழங்கவும் அரசை கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இடப்பகிர்வு தொடர்பாக அரசு இடங்களை முழுமையாக தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என கூறியுள்ளது. மேலும், உங்களுக்கே அனைத்து இடங்களும் வேண்டும் என்றால், தனியாக ஒரு வழக்கு தொடருங்கள் என்று கூறிய நீதிமன்றம், இந்த இடப்பகிர்வு வழக்கு தொடர்பாக, தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

×Close
×Close