மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், நிர்ப்பந்தம் இருப்பதாக அதிகாரிகள் கூறுவது தவறானது என, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
மதுரையை சேர்ந்த லயோனல் அந்தோனிராஜ் என்பவர், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரைக்கு போதிய அனுபவம் இல்லை. குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்”, எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து பதிலளிக்கும்படு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், செவ்வாய் கிழமை இந்த வழக்கு தொடர்பாக, ஆளுநர் தரப்பில் சீலிடப்பட்ட கவரில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தேர்வு குழு உறுப்பினர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தேர்வு குழு ஒருங்கிணைப்பாளர் நிர்ப்பந்தம் காரணமாக, மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, துனைவேந்தர் செல்லத்துரை, உயர்கல்வி முதன்மை செயலர் ஆகியோர் இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் 16-ஆம் தேதி விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், துணைவேந்தரை நியமிப்பதில் நிர்ப்பந்தம் இருந்ததாக, தேர்வு குழு உறுப்பினர்களே பதிலளித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், நிர்ப்பந்தம் இருப்பதாக அதிகாரிகள் கூறுவது தவறானது. துணைவேந்தர் நியமனத்தில் தேர்வுக்குழு தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்படுவது பொய்யானது. தவறான, பொய்யான புகார்களை கூறுபவர்கள் மீது, வழக்கு முடிந்த பின்னர்தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என கூறினார்.