தமிழக மக்களுக்கு தீபாவளி ‘பரிசாக’ தமிழகம் முழுவதும் சினிமா டிக்கெட் விலையை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. வெளியூர்களில் வேலை செய்கிறவர்கள், கல்விக்காக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் சொந்த ஊரைத் தேடி வரும் பண்டிகை இது. அப்படி கூடும் மக்கள் உற்றார் உறவினருடன் சினிமாவுக்கு சென்று மகிழ்வதும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் முக்கியமான ஒரு அம்சமாக இருக்கிறது.
தீபாவளியையொட்டிய மக்களின் அந்த மகிழ்ச்சிக்கு ஆப்பு வைத்திருக்கிறது, தமிழக அரசு! தமிழகம் முழுக்க தியேட்டர்களில் சினிமா டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி நிர்ணயம் செய்திருக்கிறது அரசு. இதன் பின்னணியில் இருப்பது, ஜி.எஸ்.டி.!
இந்தியா முழுவ முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி.யை கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு அமுல்படுத்தியது. தியேட்டர் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 18 மற்றும் 28 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. கூடுதலாக தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவீதம் ஏற்கனவே உள்ளது. இந்த இரட்டை வரி முறைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
சினிமா கேளிக்கை வரி தொடர்பாக அரசு சார்பில் ஒரு குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டதில் 30 சதவீதம் கேளிக்கை வரியை, 10 சதவீதமாக குறைத்து அரசு உத்தரவிட்டது. இதற்கும் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 38 (28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 10 சதவீத கேளிக்கை வரி) சதவீத வரியை எங்களால் செலுத்த முடியாது என கூறி அக்டோபர் 6 முதல் புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
சினிமா தியேட்டர்களை மூட இருப்பதாகவும், தியேட்டர் கட்டணத்தை உயர்த்த அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தியேட்டர் கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் குறைந்தபட்சமாக ரூ.50-ம், அதிகபட்சமாக ரூ.160-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ரூ.10 மற்றும் ரூ.120 ஆக இருந்தது. இதர நகரங்களில் அதிகப்பட்சமாக ரூ.140 தியேட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட டிக்கெட் கட்டணம் வரி இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 10 சதவீதம் கேளிக்கை வரி சேர்த்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அதிகபட்ச கட்டணமாக ரூ.220-ம், மல்டிபிளக்ஸ் அல்லாத தியேட்டர்களில் அதிகபட்சமாக ரூ.193-ம் வசூலிக்கப்படும்.
ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது குறைந்தபட்சம் ரூ.15 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதையும் சேர்த்தால் மல்டிபிளக்சில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.250-ம், மல்டிபிளக்ஸ் அல்லாத தியேட்டர்களில் ரூ.223-ம் வசூலிக்கப்படும். ஸ்னாக்ஸ் விலையையும் சேர்த்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் குறைந்தது ஒரு நபருக்கு ரூ.400 ஆகும். இதுவே ஒரு குடும்பமாக 5 பேர் சென்றால் ரூ.2000 ஆகும்.
ஏற்கனவே தியேட்டர் கட்டணம், பார்க்கிங் கட்டணம், தின்பண்டம் விலை ஆகியவை காரணமாக திருட்டு விசிடி-யை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள், அரசின் இந்த கட்டண உயர்வால் தியேட்டர் பக்கம் செல்வதை இன்னும் குறைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. மக்களுக்கு அரசு கொடுத்திருக்கும் தீபாவளி போனஸ், இந்த கட்டண உயர்வுதான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.