கவர்னர் உத்தரவுக்கு சபையில் பதிலளிக்க முடியாது : சபாநாயகர் திட்டவட்டம்

பணபேர விவகாரம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய உத்தரவை சட்டமன்றத்தில் படித்துக் காட்ட சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

ஜூன் 14-ம் தேதி சட்டமன்ற சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்ததாக, எம்.எல்.ஏ சரவணன் சென்னதை, சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பினார். பத்திரிகையில் வரும் செய்தியை வைத்து விவாதம் நடத்த இயலாது என சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்நிலையில் பணபேர விவகாரத்தில் வெளியான விடியோ சிடியுடன் ஸ்டாலின் புகாராக கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, கவர்னர், சபாநாயகருக்கும், தலைமைச்செயலாளருக்கும் அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவை சட்டமன்றத்தில் படித்துக் காட்ட வேண்டும் என திமுக தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இதற்கு சபாநாயர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக அவர் கூறும்போது: ஆளுநர் கையெழுத்துடன் வரும் கடிதத்தை மட்டுமே சட்டமன்றத்தில் படித்துக் காட்ட முடியும். ஆளுநரின் முதன்மை செயலாளர் அனுப்பி கடிதத்தை படித்துக்காட்ட முடியாது. அது தொடர்பாக ஆய்வு செய்து பதில் கடிதம் அளிக்கப்படும். மேலும், அது குறித்து சட்டமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் எனக்கு எழுதியது திறந்த ஆவணம் இல்லை என்று பதிலளித்தார்.

சபாநாயரின் விளக்கத்தை ஏற்கமறுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன் பின்னர் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணபேர விவகாரத்தில் உரிய ஆதாரங்களுடன் ஆளுநரிடம் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் புகார் அளித்தன. அதில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பணபேரம் நடைபெற்றது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பி உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் உத்தரவுகளை படித்துக் காட்ட வேண்டும் என்பது சட்டமன்ற விதியில் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் நேரமில்லா நேரத்தில் எழுப்பினோம்.

ஆனால், அந்த உத்தரவை படித்துக்காட்ட அவசியம் இல்லை என சபாநாயகர் சர்வாதிகார போக்கில் செயல்பட்டார். இதனை கண்டித்து திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் வெளிநடப்பு செய்தோம் என்று கூறினார். மேலும், வெளிநடப்பு செய்தது இந்த விவகாரத்திற்கு மட்டும் தான். மானிய கோரிக்கையில் மீது நடைபெற இருக்கும்
விவாதத்தில் பங்கேற்போம் என்று கூறினார்.

×Close
×Close