நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்க வகை செய்யும், ஜி.எஸ்.டி., முறையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதற்கான வரி விதிப்பு பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, இதுவரை 5 சதவிகித வரி கட்டி வந்த ஹோட்டல்கள், இனி 18 சதவிகித வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தென் மாநில ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நாளை ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதனால், நாளை தமிழகம் முழுவதும், 1.50 லட்சம் ஹோட்டல்கள் மூடப்படும் என, தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஆன்லைன் மூலமான மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், போலி மருந்துகள் அதிகம் விற்கப்படும் என்று மருந்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மத்திய அரசின் இந்த உத்தரவை நீக்கக் கோரி, நாடு முழுவதும் நாளை மருந்து கடைகள் மூடப்படும் என அறிவித்து உள்ளனர். இதனால், தமிழகத்தில் மருத்துவமனைகளில் செயல்படும் 3,000 கடைகள் தவிர்த்து, மற்ற 33 ஆயிரம் மருந்துக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கேன் வாட்டர் உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முதல், தனியார் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்டம் தோறும் தனியார் வாட்டர் கேன் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நாளை ஹோட்டல்கள், மருந்துக் கடைகளும் மூடப்படுவதால், மக்களின் அத்தியாவசிய தேவைகளான நீர், உணவு, மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் பெரும் அபாயம் உருவாகியுள்ளது.