நடிகை குஷ்பூ, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஆனதில் மோசடி நடந்திருப்பதாக பரபரப்பு புகார் கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக கராத்தே தியாகராஜன் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்தார்.
நடிகை குஷ்பூ, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக பொறுப்பில் இருக்கிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அரசியலில் ஆக்டிவாக இருந்த குஷ்பூ, திருநாவுக்கரசர் தலைமை பொறுப்புக்கு வந்தபிறகு ஒதுங்கியே இருக்கிறார். அவருக்கு பதிலாக காங்கிரஸ் மகளிரணியின் அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவரான நடிகை நக்மாவுக்கு தமிழக காங்கிரஸில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக புகார்கள் இருந்தன.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல் தற்போது நடந்து வருகிறது. அதன்படி கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். கட்சியின் எவ்வளவு பெரிய நியமனப் பதவியில் இருந்தாலும், பொதுக்குழு உறுப்பினர் ஆவது முக்கியம். எனவே முக்கிய தலைவர்கள் அனைவருமே பொதுக்குழு உறுப்பினர் ஆகி வருகிறார்கள்.
பொதுக்குழு உறுப்பினர் ஆகவேண்டும் என்றால், 5 ரூபாய் செலுத்தி காங்கிரஸில் அடிப்படை உறுப்பினராக இணைந்திருக்க வேண்டும். அதன்பிறகு 100 ரூபாய்க்கு விண்ணப்ப படிவம் வாங்கி, பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெரும்பாலும் முக்கியத் தலைவர்களை அவரவர் சொந்த ஏரியாவில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்து வருகிறார்கள்.
இந்த அடிப்படையிலேயே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சென்னை அண்ணா நகர் பகுதியில் இருந்து பொதுக்குழு உறுப்பினர் ஆகியிருக்கிறார். ப.சிதம்பரம், சிவகங்கையிலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டிலும், தங்கபாலு சேலத்திலும் பொதுக்குழு உறுப்பினர் ஆகியிருக்கிறார்கள்.
நடிகை குஷ்பூ, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். எனவே இவர் தென் சென்னை மாவட்டத்தில் இருந்து பொதுக்குழு உறுப்பினர் ஆக முடிவு செய்தார். அதன்படி மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 5 பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் குஷ்பூவின் பெயரும் இடம்பெற்றது.
இந்த நிலையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் இன்று (6-ம் தேதி) காலை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு அவர், குஷ்பூவை பொதுக்குழு உறுப்பினர் ஆக்கியது தொடர்பாக கட்சியின் தேர்தல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார். அதாவது, ‘குஷ்பூ கட்சியின் உறுப்பினராக புதுப்பிக்கவும் இல்லை; பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. அவரை எப்படி பொதுக்குழு உறுப்பினர் ஆக்கினீர்கள்?’ என அவர் விவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கராத்தே தியாகராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரில் ஆரம்பித்து முன்னாள் மாநிலத் தலைவர்கள் உள்பட அனைவரும் 5 ரூபாய் செலுத்து உறுப்பினர் ஆகி, 100 ரூபாய் விண்ணப்பமும் கொடுத்து பொதுக்குழு உறுப்பினர் ஆகியிருக்கிறார்கள். ஆனால் குஷ்பூ இப்படி எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் எப்படி பொதுக்குழு உறுப்பினர் ஆக முடியும்? அப்படியென்றால், உண்மையாக செயல்படும் தொண்டர்களுக்கு கட்சியின் என்ன மரியாதை? எனவே இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கிறேன்’ என்றார்.
குஷ்பூ, பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட விவகாரம் கட்சிக்குள் கோஷ்டி பூசலையும் விவாதங்களையும் அதிகமாக்கியிருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இதில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.