Advertisment

எம்எல்ஏ-க்களின் திருத்தப்பட்ட ஊதியம் ஓர் ஒப்பீடு!!

தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வு, பொருளாதார வல்லுனர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
savings account

தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வு, பொருளாதார வல்லுனர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertisment

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளானா நேற்று, விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார். அதில், முக்கியமாக தமிழக எம்.எல்.ஏ.-க்களின் சம்பளம் ஐம்பத்தைந்தாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

மேலும், எம்.எல்.ஏ.-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, இரண்டு கோடியிலிருந்து இரண்டரை கோடியாகவும், எம்.எல்.ஏ.-க்களின் ஓய்வூதியம் ரூ.12,000-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்தார்.

"ஒவ்வொரு எம்எல்ஏ-க்களும் இந்த அறிவிப்பால் உள்ளூர மகிழ்ச்சியடைந்திருப்பர். ஆனால், கட்சிக் கட்டுப்பாடுகளால் தங்களது மகிழ்ச்சியை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை" என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்த 90 சதவீத ஊதிய உயர்வுக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நெடுவாசல், கதிராமங்கலம், விவசாயிகள் பிரச்னைகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், இந்த ஊதிய உயர்வை நாங்கள் வரவேற்க தயாராக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் குறைவு தான். எனினும், ஜிஎஸ்டி-க்கு பிந்தைய தாக்கம், மாநிலத்தில் நிலவும் வறட்சி, மாநில நிதி நிலைமை உள்ளிட்டவைகளால் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வானது, பொதுமக்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், ஏழாவது ஊதியக் குழு இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இந்த சூழலில் எம்எல்ஏ-க்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கூடுதல் ஆக்ரோஷத்துடன் அரசை அணுக தூண்டும் விதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

"ஊதிய உயர்வு தேவை தான். ஆனால், 90 சதவீத ஊதிய உயர்வு தேவையற்றது. சாதாரணமாக, 5 முதல் 30 சதவீதம் வரையே அனைத்து துறைகளிலும் உயர்வளிக்கப்படும்" என கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். "எம்எல்ஏ-க்களை விட நாங்கள் கூடுதலாக உழைக்கிறோம். எங்களுக்கு தான் ஊதிய உயர்வு தேவை. அப்படியே, எம்எல்ஏ-க்களுக்கு அளிக்க வேண்டுமானால், அவர்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். ஒருவரது செயலாக்கத்தை பொறுத்தே அவரது ஊதிய உயர்வு இருக்க வேண்டும்" என ஐடி துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் பழைய மற்றும் திருத்தப்பட்ட மாத ஊதியம் ஒரு ஒப்பீடு:

**அடிப்படை ஊதியம் - ரூ.8,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்வு

**ஈட்டுப்படி (compensatory allowance) - ரூ.7,000-லிருந்து ரூ.10,000-ஆக உயர்வு

**செல்ஃபோன் படி - ரூ.5,000-லிருந்து ரூ.7,500-ஆக உயர்வு

**தொகுதிப்படி - ரூ.10,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்வு

**அஞ்சல் படி - ரூ.2,500-ல் மட்டும் மாற்றமில்லை அதே ரூ.2,500 தொடர்கிறது

**தொகுப்புப்படி - ரூ.2,500-லிருந்து ரூ.5,000-ஆக உயர்வு

**வாகனப்படி - ரூ.20,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்வு

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியிலிருந்து ரூ.2.5 கோடியாக உயர்வு

மற்ற மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாத ஊதிய விபரம்:

**தெலங்கானா - ரூ.2.5 லட்சம்

**ஆந்திரா - ரூ.1.25 லட்சம்

**உத்தரப்பிரதேசம் - ரூ.1.87 லட்சம்

**மகாராஷ்டிரா - ரூ.1.25 லட்சம்

Tamilnadu Assembly Salary
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment