நாளை குடியரசுத் தலைவர் தேர்தல்: எம்.எல்.ஏ-க்கள் எப்படி வாக்களிப்பது?

குடியரசுத் தலைவர் தேர்தலில், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள், வாக்களிக்கும் அறையின் வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள், வாக்களிக்கும் அறையின் வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையிலும், எம்.பி.-க்கள் நாடாளுமன்றத்திலும் வாக்களிப்பார்கள். தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்றவர்கள் மற்ற மாநிலங்களில் வாக்களிக்கலாம். அதன்படி, பாஜக எம்.பி., பொன்.ராதாகிருஷ்ணனும், கேரள மாநில எம்எல்ஏ ஒருவரும் தமிழக சட்டபேரவையில் வாக்களிக்கவுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, சட்டப்பேரவை வளாகத்தில் குழுக்கள் கூடும் அறையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள் ஆகியன தயார் நிலையில் உள்ளன.

வாக்குப்பதிவு மையத்தை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி நேரில் பார்வையிட்டார். தவிர, டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள மத்திய தேர்தல் பார்வையாளரான அன்சூ பிராகாஷும் பார்வையிட்டு திருப்தி தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு முறை குறித்து ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் வழங்கும் பேனா மூலமாக மட்டுமே வாக்களிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் செல்போன், பேனா ஆகியவற்றை கொண்டு வந்தால், அதை வைத்துச் செல்வதற்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சட்டப்பேரவை குழு கூட்ட அறைக்கு அருகில் உள்ள வாயில்களில், எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

**வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் வழங்கப்படும் பேனாவினால் மட்டுமே வாக்குச்சீட்டில் தங்களுடைய விருப்ப வரிசைக் குறியீட்டைச் செய்ய வேண்டும்.

**வெளியேறுவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்ட பேனாவை அதை வழங்கியவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும்.

**வேறு பேனாவை உபயோகிக்க கூடாது. அப்படி உபயோகித்தால் வாக்குச்சீட்டு செல்லாததாகிவிடும்.

**வாக்குப்பதிவு நடக்கும் இடத்துக்குள் செல்போன், கேமரா எடுத்துச் செல்லக் கூடாது.

**அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

**எந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிராக உள்ள விருப்ப வரிசை முறை கட்டத்தில் எண்ணால் எழுத வேண்டும்.

**டிக், பெருக்கல் குறியீட்டை பயன்படுத்தினால் அந்த வாக்குச்சீட்டு செல்லாததாகிவிடும்.

**வாக்குச்சீட்டில் பெயரை எழுதுவதோ, கையெழுத்து போடுவதோ, வேறு சொற்களை எழுதுவதோ கூடாது.

**வாக்குச்சீட்டை உருக்குலைக்கக் கூடாது. அதை கிழித்தாலோ, சேதப்படுத்தினாலோ வேறு புதிய வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது. வாக்குச்சீட்டை வாக்குப்பதிவு இடத்தைவிட்டு வெளியே எடுத்துச் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் அதில் ஒட்டப்பட்டுள்ளன.

×Close
×Close