தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் சிலைக்கடத்தல் வழக்கில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர் விடுமுறையில் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சிலை செய்யப்பட்டது. 111 கிலோ எடையுடன் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் 63 கிலோ எடை கொண்ட ஏலவார்குழலி சிலைகளில் ஒட்டுமொத்தமாக 8 புள்ளி 77 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், பக்தர்களிடம் 100 கிலோ தங்கத்தை தானமாகப் பெற்ற போதிலும், சிறிது கூட தங்கம் சேர்க்காமல் மோசடி நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக அரசு தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான எடையில் சிலைகளை செய்ய பரிந்துரை செய்ய அறநிலையத் துறை கூடுதல்ஆணையர் கவிதா, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் கவிதாவுடன் பணிப்புரியும் சக அதிகாரிகள் இதில் மிகப்பெரிய சதி உள்ளதாக கூறியுள்ளன. கவிதாவை கைது செய்தது பொன்.மாணிக்கவேலின் திட்டமிட்ட சதி என்றும் சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை வேண்டும் என்றே இதுபோன்ற வழக்குகளில் மாட்டிவிட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். இதுவரை எந்தவித நேரடிக் குற்றச்சாட்டுகளும் இவர் மீது இல்லாத நிலையில், இவரைக் கைது செய்திருப்பதிலேயே இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அறநிலைத்துறையை சேர்ந்த பிற அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கவிதா கைது செய்யப்பட்டதை கண்டித்தும் இனி யாரையும் கைதுசெய்துவிடக்கூடாது என்ற நோக்கில் நேற்றைய தினம் இந்து அறநிலைத்துறை தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டரில் ஆரம்பித்து ஏ.சி., டி.சி., என அனைவரும் 59 நாட்கள், 58 நாட்கள் விடுமுறை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை போட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை செய்ய ஆலோசித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.