நிலக்கரி இறக்குமதியில் “ஊழல் திமிங்கலமே” வெளியே வந்திருக்கிறது! - ஸ்டாலின் அறிக்கை

தரமற்ற நிலக்கரி இறக்குமதியில், ஒரிஜினல் இன்வாய்ஸ் கொடுப்பதற்கு பதிலாக அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகள் கொடுக்கப்பட்டுள்ளன

எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில், தரம் குறைந்த நிலக்கரியை அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்து, 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுக்குள் 3,025 கோடி ரூபாய் ஊழல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்று இருக்கிறது”, என்ற அதிர்ச்சித் தகவல், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திரு. பிரசாந்த் பூசன் அவர்கள் தொடர்ந்துள்ள வழக்கில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் புதிய மின்திட்டங்களை நிறைவேற்றாமல், மின்தேவை என்ற காரணத்தைக் காட்டி, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.44 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, இப்படியொரு மெகா முறைகேட்டை செய்துள்ளது அதிமுக அரசு என்பது வெட்கக்கேடாக இருக்கிறது. இந்த முறைகேடு குறித்த விவரங்களை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகீர் தகவல்கள் அரசு கஜானாவை திட்டமிட்டு கொள்ளையடித்திருக்கும் அதிமுக அரசின் உச்சகட்ட ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையில், “இந்தோனேஷியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை, அந்நாட்டின் துறைமுகங்களில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டாலும் சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், பிரிட்டிஷ் தீவுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக அந்நாட்டில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் இன்வாய்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள நிலக்கரி விலையை விட இந்த இடைத்தரகர்கள் நிர்ணயித்த விலை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகம் இருக்கிறது. இந்தோனேஷியாவில் நிலக்கரி இறக்குமதி செய்யும்போது, அங்குள்ள நிறுவனங்கள் அசல் இன்வாய்ஸுடன் சேர்த்து மூன்று நகல்கள் கொடுப்பது வழக்கம். இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒரிஜினல் இன்வாய்ஸ் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த தரமற்ற நிலக்கரி இறக்குமதியில், ஒரிஜினல் இன்வாய்ஸ் கொடுப்பதற்கு பதிலாக அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகள் மட்டுமே கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி, இறக்குமதி செய்துள்ள 40 முன்னணி இறக்குமதியாளர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரிக்கும் அந்த நாற்பது இறக்குமதியாளர்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் 12,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை, ஐந்து பேரிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது என்பதும், அந்த இறக்குமதியில்தான் 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதும் உற்று கவனிக்கத்தக்கது.

இந்த ஐந்து இறக்குமதியாளர்களில், ராமநாதபுரத்தில் அப்பாவி மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கும் அதானி நிறுவனத்தின் கம்பெனியும் ஒன்று. குஜராத்தைச் சார்ந்த அதானி நிறுவனத்தின் பின்னணிக் கதையையும், அதற்கும் பாஜகவுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பையும் நாடே அறியும். சூரிய ஒளி மின்சாரத்தை அதிகவிலை கொடுத்து வாங்க இந்த தனியார் நிறுவனத்திற்குத்தான் அதிமுக அரசு டெண்டர் கொடுத்தது இங்கு நினைவுகூறத்தக்கது. இப்படிப்பட்ட“மெகா” முறைகேடு நடத்தி தரமற்ற நிலக்கரி அதிமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாறு காணாத நஷ்டத்தில் மூழ்கியது.

அதுமட்டுமின்றி, தமிழக மின்சார வாரியம் இருமுறை, ஏறக்குறைய 14,000 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்தியதால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்கள், 2018-19 நிதியாண்டில் மூன்றாவது முறையாக 6 சதவீத மின்கட்டண உயர்வை மீண்டும் அனுபவித்தே ஆக வேண்டும் என்று வெளியாகியுள்ள பத்திரிக்கை செய்திகள் பொதுமக்களை பயமறுத்தி வருகின்றன. மக்களின் தலையில் 14 ஆயிரம் கோடி மின் கட்டணத்தைச் சுமத்தி, மின் வாரியத்தை நஷ்டத்தில் மூழ்க வைத்துள்ள அதிமுக ஆட்சியில், 2012 முதல் 31.3.2016 வரை இருந்த மின்வாரியத்  தலைவர்களும், அமைச்சர்களும், முதலமைச்சராக இருந்தவர்களும் 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

எனவே, நிலக்கரி இறக்குமதியில் “பூனைக்குட்டி”அல்ல “ஊழல் திமிங்கலமே” வெளியே வந்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் வீடு, கரூர் அன்புநாதன் வீடு போன்றவற்றில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகள், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக இருந்த திரு ஞானதேசிகன் திடீரென்று பல மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் மீறி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது, பிறகு அவர் திடீரென்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டது, அப்படி நீக்கப்பட்டவர் மீண்டும் பணியில் சேர்ந்தது, கண்காணாத இடத்தில் இருந்த அவர் தற்போது தொழில்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது உள்ளிட்ட பல சம்பவங்களில், ஆழமாக மறைந்துள்ள அனைத்து மர்மங்களும் இந்த நிலக்கரி இறக்குமதி ஊழலுடன் பின்னிப் பிணைந்துள்ளன.

தரமற்ற நிலக்கரி, ஜெராக்ஸ் காப்பி, அதிகவிலை என்று பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இறக்குமதி நிறுவனங்களும், அதிமுக அரசும் கைகோர்த்துக் கொண்டு இந்த பயங்கர ஊழலைச் செய்திருப்பதை பார்க்கும் போது, “ஊழல்” என்ற சாக்கடையில் தலைமுதல் தாள்வரை இந்த அதிமுக அரசு எந்த அளவிற்கு மூழ்கிக் கிடக்கிறது என்பது வெளியாகிறது. வரலாறு காணாத இந்த, தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்து அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் அவர்கள் சார்பிலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களை நிச்சயம் புறந்தள்ளி விட முடியாது. ஆகவே, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்காகக் காத்திராமல், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து, உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close