நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழகம் முழுவதும் நடந்த மனித சங்கிலியில் தி.மு.க.வினர் திரண்டனர். சேலத்தில் பங்கேற்கவிருந்த ஸ்டாலின் போலீஸ் தடை காரணமாக அங்கு செல்லவில்லை.
மருத்துவ மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க தமிழக அரசு கொண்டு வந்த 85 சதவிகித இட ஒதுக்கீடை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் இது தொடர்பாக டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தினர். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மாநில அரசு மூலமாகவே அவசர சட்டம் இயற்றியது போல, நீட் பிரச்னையையும் அணுக மத்திய அரசு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிகிறது. அதன் மூலமாக அடுத்த ஒரு ஆண்டு அல்லது இரு ஆண்டுகளுக்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க முடியும் என்கிறார்கள்.
ஆனால் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும்’ என போராட்டங்களை முன்னெடுக்கிறார். அதன் ஒரு கட்டமாக ஜூலை 27-ம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இந்தச் சூழலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தி.மு.க.வினரால் தூர்வாறப்பட்ட ஒரு குளத்தை பார்வையிட ஸ்டாலின் ஜூலை 27 அன்று காலையில் சேலத்திற்கு கிளம்பினார். குளத்தை பார்வையிட்டு முடித்ததும், அங்கேயே தி.மு.க.வினர் ஏற்பாடு செய்யும் மனித சங்கிலியில் அவர் பங்கேற்பதாக ஏற்பாடு!
அந்தக் குளம் தொடர்பாக உள்ளூரில் ஏற்கனவே தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் மோதல் நீடித்து வந்தது. எனவே ஸ்டாலின் அங்கு சென்றால் பிரச்னை பூதாகரமாகும் என கருதிய போலீஸார், சேலம் செல்லும் வழியில் கோவையில் ஸ்டாலினை கைது செய்தனர். இதனால் மனிதசங்கிலி நடக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.
காரணம், ஸ்டாலின் கைதானால் அதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் செய்வது வழக்கம்! ஆனால் இந்த முறை ஸ்டாலின் முன்கூட்டியே உஷாராக ஒரு அறிவிப்பு செய்தார். ‘நான் கைதானாலும், அதற்காக கட்சியினர் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது. மாலையில் மனிதசங்கிலியில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்’ என அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி ஜூலை 27 அன்று மாலையில் தி.மு.க.வின் அமைப்பு ரீதியான 65 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வடசென்னையில் நடைபெற்ற மனிதசங்கிலியில் கலந்து கொண்டனர். சென்னை தெற்கில் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மனிதசங்கிலியில் ஆ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதேபோல பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தி.மு.க. முன்னனியினரும் வெவ்வேறு ஊர்களில் மனிதசங்கிலியில் கை கோர்த்தனர்.
கோவையில் கைது செய்யப்பட்ட தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், மாலையில்தான் விடுவிக்கப்பட்டார். எனவே அவரால் சேலத்தில் நடைபெற்ற மனிதசங்கிலியில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் கோவையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கிளம்பினார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த அதே நாளில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நடத்திய போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டது.