இந்த எழுச்சியான நேரத்தில் எனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டுமென ஒரு தர்மயுத்தத்தைத் தொடங்கினோம். கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடாது என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை, சபதமாக மேற்கொண்டு ஒரு புனிதப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தொண்டர்களின் அமோக ஆதரவினால், அந்தப் புனிதப் பயணம் புரட்சிப் பயணமாகவே மாறிப்போனது. தமிழக மக்களுடைய நல்லாசிகளோடு நமது புரட்சிப் பயணம் வெற்றித் திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த எழுச்சியான நேரத்தில் எனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
அதிமுகவின் ஒன்றரைக் கோடி விசுவாசத் தொண்டர்களில் நானும் ஒரு தொண்டனாக ஜெயலலிதாவின் லட்சியத்தைக் காக்க, கொள்கைகள் வெற்றியடைய பாடு படும் படைவீரனாக, உங்களில் ஒருவனாகவே இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. என்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக, நம்பிக்கையின் காரணமாகத்தான் நற்பனை மன்றங்கள் தொடங்கியுள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் என்றாலும், முதலமைச்சராக இருந்தபோதும் ஜெயலலிதாவின் புகழ்பாடும் முதன்மைத் தொண்டனாகத்தான் இருந்தேன்.
கட்சியை காப்பதற்கும், மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைப்பதற்கும் பாடுபடுவோம். நாம் தொடங்கியிருக்கும் தர்மயுத்தம் மாபெரும் வெற்றியடைய அயராது உழைப்போம். இந்த நேரத்தில் எனது பெயரில் மன்றங்கள் அமைத்து, எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து, உங்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்தி விடாதீர்கள். நாம் தொடங்கியிருக்கும் புனிதப் போருக்கு தலைமையேற்று நடத்தும் முதன்மைத் தொண்டனாகவே இருக்கும் பெரும் பாக்யம் கிடைத்ததே எனது வாழ்நாளில் கிடைத்த பெரிய உயர்வாக நினைக்கிறேன். அந்த மகிழ்ச்சி ஒன்றே எனக்கு போதும்.
எனவே, மன்றங்களாக இருந்தாலும் சரி, பாசறைகளாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட யார் பெயரிலும் தொடங்காமல், எம்ஜிஆர் உருவாக்கிய நம் இயக்கத்தை ஜெயலலிதா எஃகுக் கோட்டையாக மாற்றியுள்ளார். அதை நாம் அதைக் காட்டிக்காப்போம் என்ற நம்பிக்கையில் நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும், மன்றங்களும் மட்டுமே செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
தமிழக மக்களுக்காக ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியிருந்த நன்மைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதே நமது லட்சியமாக இருக்கட்டும். அந்த லட்சியங்கள் நிறைவேற, வெற்றி இலக்கை எட்டும்வரை, நம் தர்மயுத்தம் தொடரட்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.