மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலையிட்டு உதவ தயாரான போதும், சென்னையில் பிச்சை எடுப்பதை கைவிட மறுக்கிறார் ரஷ்ய பயணி!
ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவ்! இவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். இவரது ஏடிஎம் கார்டு முடங்கியதால் காஞ்சிபுரம் கோயிலில் பிச்சை எடுத்தார். இந்தத் தகவல் நாடு முழுவதும் பரவி, பரபரப்பானது.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டரில், ‘ஈவ்ஜெனீ உங்கள் நாடான ரஷ்யா எங்களது நண்பன். சென்னையில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.
ஆனால் ஈவ்ஜெனீ பெர்ட்னிக்கு பிச்சை எடுப்பது ரொம்பவும் பிடித்துப் போனது. இவரைப் பற்றிய செய்திகள் மீடியாவில் வந்ததால், பலரும் இவருக்கு இரக்கப்பட்டு தாராளமாக பிச்சை போட்டனர். ஒரு கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இவரை சந்தித்த உள்ளூர் பிரமுகர்கள் சிலர், ‘நீங்கள் சென்னையில் ரஷ்ய தூதரகத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்’ என கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் சென்னைக்கு வந்த ஈவ்ஜெனீ பெர்ட்னி, இங்கு தி.நகரில் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலை சுற்றி பார்த்தார். பின் அங்கு அமர்ந்து பிச்சை எடுக்கத் தொடங்கினார். அவருக்கு பிச்சை போட்ட சிலர் அவருடன், செல்பி எடுத்தார்கள். அவர்களிடம் செல்பிக்கு தனியாக 100 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து ஈவ்ஜெனீ பெர்ட்னி வசூல் செய்த கூத்தும் நடந்தது.
இது குறித்து தகவல் கிடைத்து, போலீசார் அங்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர். போலீஸாரிடம், ‘சிவபெருமான் என் கனவில் வந்து என்னை பிச்சை எடுக்க சொன்னார்.’ என்றும் கதை விட்டாராம் அந்த ஆசாமி. இன்னொரு தருணத்தில், ‘ஐ லைக் திஸ் கல்ச்சர்’ (பிச்சை எடுக்கும் கலாச்சாரத்தை விரும்புகிறாராம்) என கூறியிருக்கிறார்.
அவர் வைத்திருந்த ஆவணங்களை போலீஸ் ஆய்வு செய்தனர். நவம்பர் 22-ம் தேதி வரை இந்தியாவில் இருப்பதற்கான சுற்றுலா விசா இருந்தது. ஆவணங்கள் முறையாக இருந்ததால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து ரஷிய துணை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட நபர் உதவி கேட்டு எங்களை தொடர்பு கொண்டால் மட்டுமே நாங்கள் அவருக்கு உதவி செய்வோம்’ என்று கூறினர். விசா எடுத்து வந்து பிச்சை எடுக்கும் இவரை என்ன செய்வது? என புரியாமல் விழி பிதுங்கிப் போயிருக்கிறார்கள், போலீஸார்.