“கமல்ஹாசன் நல்லது செய்யத்தான் அரசியலுக்கு வருகிறார்” – ஆதரவு தெரிவித்த ஓவியா

கமலிடம் புகழும், பணமும் இருப்பதால், அதைச் சம்பாதிப்பதற்காக அவர் அரசியலுக்கு வரவில்லை.

By: October 19, 2017, 9:46:33 PM

“கமல்ஹாசன் நல்லது செய்யத்தான் அரசியலுக்கு வருகிறார். பணமும், புகழும் ஏற்கெனவே அவரிடம் இருப்பதால், அதைச் சம்பாதிக்க அவர் அரசியலுக்கு வரவில்லை” என ஓவியா தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சமூகத்துக்கும் எனக்கும் எப்போதும் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கும். எனக்கு எது சந்தோஷமோ, அதை மட்டுமே நான் செய்வேன். அப்படி செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. என மனசாட்சிக்கு எது சரியெனப்படுகிறதோ, அதை மட்டுமே செய்வேன். மற்றவர்களுக்கு அது சரியாகத் தெரிந்தாலும், தவறாகத் தெரிந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

நான் இப்படிப் பண்ணா என்னைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள், என் இமேஜ் என்ன ஆகும் என நினைத்து இதுவரை நான் எதுவும் செய்தது இல்லை, இனிமேல் செய்யப் போவதும் இல்லை. எனக்குப் பயம் கிடையாது.

எனக்குத் தெரிந்தவரை அரசியல் என்பது வேலை கிடையாது. அதை சேவையாகத்தான் செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்கு நல்ல பிளாட்பார்ம் அது. புகழுக்காகவும், பணத்துக்காகவும் நிறைய பேர் அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

கமல் சாரை எனக்கு ஏன் பிடிக்கும் என்றால், தன்னை சாதாரண மனிதனாகத்தான் அவர் பார்க்கிறார். அந்த மாதிரி ஆட்கள் தானே அரசியலுக்கு வரவேண்டும்? அவங்க கட்சிக்கு சப்போர்ட் பண்றேன் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. மனிதனாக அவரைப் பிடிக்கும். ஏற்கெனவே அவரிடம் புகழும், பணமும் இருப்பதால், அதைச் சம்பாதிப்பதற்காக அவர் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியலுக்கு வருகிறார் என்பது எனக்கு பர்சனலாகத் தெரியும். கட்சி சார்பில்லாமல், மனிதனாக அவருக்கு என் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ஓவியா.

‘இத்தனை நாட்களாக கமல் ஏன் அரசியலுக்கு வரவில்லை?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ஓவியா, “எல்லாவற்றுக்கும் நேரம் என்ற ஒன்று இருக்கிறது. இத்தனை வருடங்களாக அவர் நடித்துக் கொண்டிருந்தார். நடிப்பதில் அவர் கவனம் செலுத்தியிருப்பார். அது அவருடைய பர்சனல் விஷயம். இப்போது அவருக்கு அரசியல் எண்ணம் தோன்றியிருக்கிறது. அது நல்ல விஷயம்தானே… அதை நாம் சப்போர்ட் பண்ண வேண்டும்.

இதுவரைக்கும் அவர் மக்களுக்காக என்ன செய்தார்? என்று கேட்கிறீர்கள். இனிமேல் சேவை செய்யத்தானே அவர் அரசியலுக்கு வருகிறார். சினிமாவில் பெரிதாக நல்லது எதுவும் செய்ய முடியாது. காரணம், சினிமா என்பது பொழுதுபோக்கு. சினிமா மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஏனென்றால், மக்கள் அதைப் பொழுதுபோக்காகத்தான் பார்க்கிறார்கள்.

நடிகருக்கு ஓய்வு என்பது கிடையாது. இப்போது கூட அவரைத் தேடி ஏகப்பட்ட கேரக்டர்கள் வருகின்றன. ஆனால், அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லித்தானே அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார்? நாம என்ன சொன்னாலும், எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள்தானே ஓட்டு போட வேண்டும். மக்களுக்குப் பிடிச்சிருந்தா நல்லதுதானே…” என்று தெரிவித்துள்ளார் ஓவியா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:I support kamal haasan political entry says oviya

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X