என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகி நானே வாதாடுவேன் என கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச் சிறை நாள்தோறும் பரபரப்புக்குள்ளாகி வருகிறது. இந்த சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைத்துறை மறுப்பு தெரிவித்து வந்தது.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகைகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். சிறப்பு வசிதிகள் குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சிறை விவகாரத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
குற்றம் சுமத்திய டிஐஜி ரூபா, குற்றச்சாட்டுக்கு ஆளான சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் உள்ளிட்டோரை அம்மாநில அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
இதனிடையே, தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரூபா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என கூறி ரூபாவுக்கு சத்யநாராயண ராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் ஆஜராகி நானே வாதாடுவேன் என கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். மேலும், நான் எனது கடமையை செய்ததற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். சத்யநாராயண ராவ் அனுப்பிய நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வேன். இது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன் எனவும் ரூபா தெரிவித்துள்ளார்.