அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா மீது டி.ஐ.ஜி. ரூபா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும், அதனை திரும்ப பெறாவிட்டால் ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கூறினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறையில் விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாகவும், அதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவிற்கு சசிகலா தரப்பில் இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதையடுத்து ரூபா மற்றும் சத்ய நாராயணராவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சசிகலாவிற்கு அவரது அறைவில், மின்விசிறி, கட்டில்,மெத்தை உள்ளிட்ட வசதிகள் செய்திருப்பதுபோலவும், அவர் சுடிதார் அணைந்துகொண்டு தனது அறையில் சுதந்திரமாக உலா வருவது போலவும் சிசிடிவி வீடியோக்கள் வெளியாகின.
இந்த வீடியோக்கள் பொய்யானவை என அதிமுக அம்மா அணி சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வீடியோ ஆதாரம் உண்மையானதே என டி.ஐ.ஜி. ரூபா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், ”கர்நாடக சிறையில் யாருமே இல்லாத அறையை காண்பித்து, அது சசிகலாவின் அறை என்று கூறினால் அதனை எவ்வாறு ஏற்க முடியும்? சசிகலா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை டி.ஐ.ஜி. ரூபா சுமத்தி வருகிறார். அவர்றை திரும்பி பெறாவிட்டால் மாவட்ட செயலாளர் என்ற ரீதியில் நான் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். அவர் மீது வழக்கு தொடருவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறோம். விரைவி டி.ஐ.ஜி. ரூபா மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். எந்தவித ஆதாரங்கள் வைத்திருந்தாலும் அதனை நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும். விதிகளை தாண்டி சசிகலாவிற்கு எந்த வசதியும் சிறையில் செய்து தரப்படவில்லை. நீதிபதி குன்ஹா தீர்ப்பின் அடிப்படையில் சசிகலா தனது சொந்த உடையை அணிந்து கொள்ளலாம். காவிரி பிரச்னை நடக்கும் மாநிலம் கர்நாடகம் என்பதால் சசிகலாவுக்கு எந்த வசதியும் செய்து தர மாட்டார்கள்.”, என கூறினார்.