ஆறு மாதங்களில் தேர்தல் வந்தாலும் கண்டிப்பாக சந்திப்பேன் என்று சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அரசியலுக்கு ரஜினி வர வேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட நாளாக சொல்லி வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். அவருடைய பிறந்த நாள் அன்று அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி, ‘கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று அறிவித்தார். அடுத்த நாளே வெப்சைட், ஆப் அறிமுகப்படுத்தி, உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்தார். அதோடு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்பதை ரஜினிகாந்த் மக்கள் மன்றமாக மாற்றினார்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் 16ம் தேதி நள்ளிரவில், ‘பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சி பெயரை அறிவித்து, சுற்றுப்பயணம் செய்கிறேன்’ என்று அறிக்கை கொடுத்தார்.
இந்நிலையில், சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
எம்ஜிஆர் கொள்கையை அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றனவா?
கண்டிப்பாக, ஓரளவு பின்பற்றுகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி உள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கமல் அரசியல் அறிவிப்பை நீங்கள் முன் கூட்டியே எதிர்பார்த்தீர்களா?
இல்லை நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்களும் கமலும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா?
அதற்கு காலம் தான் பதில் சொல்லும், பார்க்கலாம்.
சட்டமன்றத் தேர்தலை சந்திப்பேன் என்று கூறியுள்ளீர்கள் 6 மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா?
கண்டிப்பாக சந்திப்பேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.