தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித், அரசியல் சார்பு இல்லாமல் செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு கடந்த ஒரு வருடமாக மஹராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தான் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், தமிழகத்திற்கு புதிய ஆளுநராக மேகாலயா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றதையடுத்து, அவர் தமிழகத்திடமிருந்து விடைபெற்று சென்றார். அன்றைய நாளே புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை வந்தார்.
அவருக்கு, வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியம், பொன்முடி உள்ளிட்டோரும், பாஜக சார்பாக பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழா நிறைவடைந்தபின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசியலமைப்பு சட்டத்தைக் காக்க வேண்டும் என்பது என் முதல் கடமை. அரசியல் ரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் என்னால் எடுக்கப்படாது. தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்து தமிழக அரசுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். தமிழக அரசின் நிர்வாகத்தில் முழு வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்.”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.