ரஜினிக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். ஆதரவா?

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், ரஜினிக்கு ஆதரவளித்துள்ளதாக சமூகவலைதளங்களில் சில பதிவுகள் வைரலாக பரவி வந்தது....

நடிகர் ரஜினிகாந்த், கடந்த வாரம் நடந்த ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில், தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாகவும், சூசகமாகவும் தெரிவித்தார். குறிப்பாக, ‘என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் நல்லாயிருக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?’ என்று கூறி ரசிகர்களின் ஃபியூஸ் போன பல்பிற்கு மீண்டும் சார்ஜ் கொடுத்தார்.

இதையடுத்து, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ரஜினி குறித்த டாபிக் தான் ஒவ்வொரு இடங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி தனிக் கட்சி தொடங்குவாரா? பாஜகவுடன் சேர்வாரா? இவருக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? என பலவிதமான தலைப்புகளில் விவாத மேடைகள் அமைத்து விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், ரஜினிக்கு ஆதரவளித்துள்ளதாக சமூகவலைதளங்களில் சில பதிவுகள் வைரலாக பரவி வந்தது. தொடர்ந்து இதேபோன்ற பதிவுகள் வந்ததால், சமூகவலைதளத்தில் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த சர்ச்சை பதிவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நெல்லையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கூறுகையில் ”தமிழ்ச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறேன். ரஜினிகாந்துக்கு நான் ஆதரவளிப்பதாக பரவும் தகவல்கள் உண்மையல்ல” என்றார்.

×Close
×Close