scorecardresearch

என் நேர்மையை சந்தேகப்படுகிறீர்களா? ஐ.ஏ.எஸ் சகாயம் வேதனை!

சகாயம் குழு அறிக்கையில் 1.11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்ததுடன் அதன் பணி முடிந்து விட்டது.

என் நேர்மையை சந்தேகப்படுகிறீர்களா? ஐ.ஏ.எஸ் சகாயம் வேதனை!

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், முறைகேடு தொடர்பாக புகார்கள் பெற அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு நிர்வாக செலவுகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே மீனாட்சி சுந்தரத்துக்கான ஊதியத்தையும், அலுவலக நிர்வாக செலவு தொகையையும் உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் முறையீடு செய்தார். மேலும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சகாயம் குழுவுக்கு மொத்தமாக 58 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என கூறி, அரசு வழக்கறிஞர் அரசு உத்தரவை தாக்கல் செய்தார். அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு ஊதியம் வழங்குவது பற்றி கூறவில்லை. விசாரணைக் குழுவை கலைப்பது பற்றி நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கிரானைட் தொழிற்சாலைகள் கூட்டமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சகாயம் குழு அறிக்கையில் 1.11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்ததுடன் அதன் பணி முடிந்து விட்டது. இன்னும் குழுவை நீட்டிக்க முடியாது என வாதிட்டார்.

அதற்கு சகாயம் குழு தரப்பு வழக்கறிஞர், “விசாரணை குழு அறிக்கை மீது சந்தேகம் தெரிவிப்பது, சகாயத்தின் நேர்மையை சந்தேகிப்பதற்கு சமம்” என வேதனை தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ias sahayam says dont doubt by report regarding granite scam

Best of Express