Advertisment

ஜி.எஸ்.டி-யில் அரை சதவிதம் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கீடு செய்தால் ரூ.25,000 கோடியைத் தாண்டும்: அன்புமணி

ஜி.எஸ்.டி வரியில் அரை விழுக்காடு விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதன் மதிப்பு ரூ.25,000 கோடியைத் தாண்டும்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss

20 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசுக்கு அதில் ஒரு விழுக்காட்டை விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்குவதற்காக ஒதுக்க மனம் வராதது வேதனை அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒருபுறம் கூறிவரும் மத்திய அரசு, மறுபுறம் விவசாயிகளை வளர்ச்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்பதும், விவசாயத்தை லாபமானதாக மாற்றுவதும் எளிது என்றாலும் அதை ஆட்சியாளர்கள் செய்யாதது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது பொருளாதார ஆய்வறிக்கையில் வேளாண்துறைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து எதிர்மறையான கணிப்புகளே இடம்பெற்றுள்ளன. மாநில அரசுகள் தள்ளுபடி செய்த பயிர்க்கடனின் மதிப்பு ரூ.2.70 லட்சம் கோடியைத் தொடக்கூடும் என்றும், பயிர்க்கடன் தள்ளுபடியால் நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.70%, அதாவது ரூ.1.10 லட்சம் கோடி குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு முக்கியக் காரணம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவது உள்ளிட்ட வேளாண்துறைக்கு வழங்கப்படும் சலுகைகள் தான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. இனி எந்தக் காலத்திலும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாது என்பது தான் மத்திய அரசு சொல்ல வரும் செய்தியாகும். இது செய்தியல்ல. திட்டமிடப்பட்ட சதியாகும்.

விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி தான் தீர்வு என்று பாமக ஒருமுறைகூட கூறியதில்லை. ஆனால், விவசாயிகளுக்கும், உழவுத் தொழிலுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை மத்திய, மாநில அரசுகள் செய்யத் தவறிய பாவத்துக்கான செய்ய வேண்டிய பரிகாரம் தான் பயிர்க்கடன் தள்ளுபடி என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கொடுத்தால், அதைத் தவிர கூடுதலாக எந்த சலுகையும் வழங்கத் தேவையில்லை என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எந்த அரசும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாததுதான் விவசாயிகளின் அவலநிலைக்கு காரணமாகும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழு கடந்த 2006-ஆம் ஆண்டு அறிக்கை அளித்தது. ஆனால், அதன்பின் 12 ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து ஆங்கில நாளேட்டுக்கு நேர்காணல் அளித்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன், ''வேளாண் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்தாததற்கு விலைவாசி உயர்ந்து விடும் என்பது போன்ற அனைத்துக் காரணங்களும் கூறப்படுகின்றன. ஆனால், நாட்டு மக்கள்தொகையில் பாதியாக உள்ள விவசாயிகள் சாப்பிட வேண்டாமா?

பணவீக்கத்திலிருந்து அரசு ஊழியர்களைக் காப்பாற்ற ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த தயாராக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டாமா? பயிர்க்கடன் தள்ளுபடிகள் அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்துகின்றன. ஆனால், அதைவிடக் குறைவாக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி மட்டுமே செலவு பிடிக்கக்கூடிய, வேளாண் விளைபொருட்களுக்கு கூடுதல் கொள்முதல் விலை தரும் திட்டத்தை செயல்படுத்த ஆட்சியாளர்கள் தயாராக இல்லை'' என்று தெரிவித்திருக்கிறார்.

எம்.எஸ்.சுவாமிநாதனின் இந்தக் குற்றச்சாட்டை அவ்வளவு எளிதாக ஒதுக்கிச் சென்றுவிட முடியாது. ஆண்டுக்கு சுமார் ரூ.20 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசுக்கு அதில் ஒரு விழுக்காட்டை விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்குவதற்காக ஒதுக்க மனம் வராதது வேதனை அளிக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், கலால் வரியை உயர்த்தியதால் மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதில் 10% ஒதுக்கீடு செய்தால் இந்தியாவில் உள்ள 60 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கண்ணியத்துடன் வாழ்வர். அதுமட்டுமல்ல, ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பாக சேவை வரி மீது 0.5% விவசாயிகள் நல வரி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.10,800 கோடி அளவுக்கு இந்த வரி வசூலிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த வரி ரத்தாகி விட்டது. அதற்கு பதிலாக ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி வரியில் அரை விழுக்காடு விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதன் மதிப்பு ரூ.25,000 கோடியைத் தாண்டும். இந்த நிதியை விளைபொருட்களுக்கு கூடுதல் விலை வழங்குவதற்கு ஒதுக்கினால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2750, ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 விலை வழங்க முடியும். இது விவசாயிகளின் வாழ்வில் துயரத்தைத் துரத்தி விடும். எனவே, விளைப்பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை வழங்க அரசு முன்வர வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்

Anbumani Ramadoss Pmk Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment