இலவச செட்டாப் பாக்ஸ்: பணம் வசூலித்தால் உரிமம் ரத்து-ஆட்சியர் எச்சரிக்கை

இலவச செட்டாப் பாக்ஸ்-க்கு பணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இலவச செட்டாப் பாக்ஸ்-க்கு பணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்படுவதைத் தொடர்ந்து விரைவில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்கீழ் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இலவச “டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்” உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், சில உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப்பாக்ஸ் தாங்கள் வழங்குவதாகவும், அதற்காக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் இணைப்புத் துண்டிக்கப்படும் என்றும் பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.

பொதுமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். தேவையற்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமம் பெற்றுக்கொண்டு அரசு கேபிள் டிவி இணைப்பைத் துண்டித்தும், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும் தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.

அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் அவர்களின் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகாரை 1800 425 2911 அல்லது 0424-2262573 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close