தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. நாளிதழான முரசொலியின் பவழவிழா நேற்றும், இன்றும் (ஆகஸ்ட் 10, 11) சென்னையில் நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். விழாவின் முதல் நாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகை அதிபர்கள் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்ற வாழ்த்தரங்கம் நடந்தது.
2-ம் நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 23 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சரியாக முரசொலி பவளவிழாவின் தொடக்கதினமான ஆகஸ்ட் 10-ம் தேதி அ.தி.மு.க.வில் அதிரடியான நிகழ்வுகள் அரங்கேறின. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி, ‘டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட முடியாது’ என தீர்மானம் நிறைவேற்றினர்.
இதைத் தொடர்ந்து டி.டி.வி.யின் பேட்டி, எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பேட்டிகள் என முதல் நாள் முழுக்க இது தொடர்பான செய்திகளும் விவாதங்களுமே மீடியாவை ஆக்கிரமித்தன. இந்நிலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்தில் கூடும்படி தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு முன்தினம் இரவு மு.க.ஸ்டாலினிடம் இருந்து அவசர செய்தி வந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூடினர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மாலையில் நடைபெறும் பவளவிழா ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்கள் குறித்து சீனியர் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்ததாக தெரிகிறது.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு முடிவு ஏற்படவேண்டும்’ என்றார் ஸ்டாலின். ‘எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்களா?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘தேவைப்பட்டால் கொண்டு வருவோம்’ என்றார் ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமி அரசு ஏற்கனவே நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஜெயித்து வருகிற 20-ம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. அதன்பிறகே தி.மு.க.வால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி.தினகரனுக்கு கிடைக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மற்றும் ஆட்சியைக் கவிழ்க்க அவர் தயாராவதைப் பொறுத்தே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவரும் எனத் தெரிகிறது.