Advertisment

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க நினைப்பேன்: கமல்ஹாசன்

என்னுடைய நண்பர் அவர். அது சரியாக இருந்திருந்தாலும், தப்பாக இருந்திருந்தாலும் அதை அவரிடம் தான் நான் சொல்வேன். ஒரு பேட்டியில் சொல்லமாட்டேன்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK Alliance Neglects Kamal Haasan, MK Stalin

DMK Alliance Neglects Kamal Haasan, MK Stalin

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

நடிகர் கமல்ஹாசன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

கேல்வி: கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்?

கமல்: எப்போது மாறவில்லை என்று சொல்கிறீர்கள்? சினிமாவில் பெரும் புரட்சியாளர் என்கிறார்கள், அதுவே போதுமானது. அதைக்கூட செய்யாதவர்கள் இருக்கிறார்களே, அந்தவகையில் இது புரட்சிதானே? சினிமா தான் உயிர்மூச்சு என்று சொல்பவனை, நீ நடிச்சுடுடா பார்க்கலாம், இனி இந்த தொழிலில் நீ இருக்க முடியுமா என்று சவால் விடுகிறார்கள் என்றால் அது அவனுக்கு மரணம் போல தானே? பாரதியார் பேனாவை பிடுங்கி, இனிமேல் நீ எழுதக்கூடாது என்று கூறினால், அவர் வாயால் முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். அதனை தாண்டியும் நான் விஸ்வரூபம் எடுத்தேன். அது புரட்சி இல்லையா?

காட்டுக்குள் சென்று நக்சலைட்டுகளுடன் சென்று சண்டை போடுவது தான் புரட்சி என்பீர்களா?

கேள்வி: ஜெயலலிதா மறைந்த பின்னர் கமல்ஹாசனுக்கு ஒரு அதீத துணிச்சல் வந்துவிட்டது என்றும், அதனால் பாரபட்சம் பார்க்காமல் விமர்சிக்கிறார் என்றும் கூறப்படுகிறதே?

கமல்: தமிழக அரசு, ராஜ்கமல் எனும் சிறிய கம்பெனியுடன் மோதியது. பெரிய பணக்காரன் ஒருத்தன் அழுந்த தும்மினால் காணாமல் போய்விடும். என் பலமும், பலவீனமும், எனது அளவும் என்னவென்று எனக்கு தெரியும்.

இருந்தாலும் 15 வருடங்களாக எனக்கு தொடர்ந்து சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு கலைஞனை மட்டுமே நம்பி நடக்கின்ற கம்பெனி தான் ராஜ்கமல். அதனால் தான் பணிந்து பணிந்து சென்றுகொண்டே இருந்தேன். ஆனாலும் துரத்தி துரத்தி தாக்கப்பட்டேன். ஆனாலும் அமைதியாக இருந்தேன்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு இந்த கருப்பு பண விளையாட்டில் நாம் சம்பந்தப்பட்டுவிட கூடாது என்ற கருத்தை நான் எனக்குள் எடுத்துக்கொண்டேன்.

எப்படி இறைமறுப்பை நான் எடுத்தேனோ, அதுபோல. நான் யாரையும் இடைஞ்சல் செய்யவில்லை. என் அளவில் கருப்பு பணம் நான் வாங்கமாட்டேன். அது என்துறையில் மட்டும் அல்ல, என் வாழ்வில் நான் செய்த புரட்சி.

ஜெயலலிதா இருந்தபோது கூட அடி பலமாக விழவில்லை. எனது மும்பை எக்ஸ்பிரஸ், சண்டியர் படங்களின் பெயர் மாற்றுதலுக்கான உந்தல் எங்கிருந்து வந்தது என்பது கூட புரியவில்லை. நான் அவரிடம் தான் உதவியை எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் அங்கிருந்து தான் வந்தது பிரச்சினை. ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலும் நான் அமைதியாகவே இருந்ததில்லை என்பது தான் என் வாதம்.

தமிழக அரசை எதிர்த்து வழக்கு போடுவது என்பது சாமானியமான காரியமா? ஆனால் அதில் கிடைத்த வெற்றி, எனக்கு நீதி-நியாயத்தின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் மறுநாளே மறுபடியும் என் படத்துக்கு தடை போடப்பட்டது.

நாட்டை விட்டு போவேன் என்று கூறியது ஏன்?

அப்போது என்னை அவர் காலில் விழ திரைத்துறையினர் வலியுறுத்தினர். காலில் விழுவது பெரிய விஷயம் அல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எனக்கு மூத்தோர் காலிலும் விழுந்திருக்கிறேன். ஆனால் நியாயத்துக்கு நேர் மாறாய் எனக்கும், என் தொழிலுக்கும் துரோகம் செய்திருந்தால் பெற்றவளே ஆனாலும் வணங்கமாட்டேன், என்ன நஷ்டம் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். இதனை அவமரியாதை ஏற்படுத்தவேண்டும் என்ற கோணத்தில் சொல்லவில்லை.

நாட்டை விட்டு போவேன் என்பதை எனக்கு கிடைத்த அவமானத்தில் சொல்லிவிட்டேன் என்கிறார்களே, நான் வாழும் நாட்டை விட்டு தானே போவேன் என்று கூறினேன். அதை கூட புரிந்துகொள்ள வேண்டாமா?

கம்பனுக்கு மரியாதை கிடைக்காததால் அரங்கேற்றத்துக்காக சோழ நாட்டில் இருந்து, சேர நாட்டுக்கு சென்றார். அப்படி ஒரு கோபம் தான் எனக்கு.

கேள்வி:- உங்கள் மீது மட்டும் ஏன் இத்தனை தாக்குதல்?

கமல்: தெரியவில்லையே. துரத்தி துரத்தி அடிக்கிறார்கள். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறினார்கள். அதை உண்மையிலேயே இஸ்லாமியர்கள் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இது திட்டமிடப்பட்ட நிகழ்வு என்று நான் கூறினால், உடனே என்னை கைது செய்யவேண்டும் என்பார்கள்.

நான் சந்தேகப்படத்தான் முடியும். இது அரசாங்கமே செய்ததா? என்று கேட்டால், எனக்கு தெரியாது. யாரை குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிட்டு பேசுகிறார்களோ, அவர்கள் என்னிடமே முறையிட்டு இருக்கிறார்கள். எனவே எனக்கு அழுத்தமான சந்தேகம் உண்டு. இல்லையென்றால் எனக்கு இப்படி கோபம் வரவேண்டிய அவசியமே இல்லையே.

கேள்வி: ஜெயலலிதாவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே தனிப்பட்ட பகை உண்டா?

கமல்: சத்தியமாக இல்லை.

கேள்வி: தணிக்கை சான்றிதழ் பெறுவதில் லஞ்சம் இருப்பதாக கருத்து கூறினீர்களே. அப்படி என்றால் தவறு என்பது காசு வாங்குவோர் மீதா? காசு கொடுப்போர் மீதா?

கமல்: இரண்டு தரப்பினர் மீதும் தான் தவறு இருக்கிறது. இந்த தவறு இப்போது தான் நடக்க ஆரம்பித்துள்ளது. என் திரையுலகமும் காசு கொடுத்து வருகிறது என்று சொல்லச்சொன்னாலும் தவறில்லை, சொல்கிறேன்.

இந்த விவகாரத்தில் என் கருத்துக்கு ஒருவர் தான் குரல் கொடுத்தார். இந்த ஊழல் செய்தவர்கள் யார் என்பவர்களது பெயரையும் கூறவில்லை.

இப்போது ஒரு அமைச்சரே, ‘கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் யாராவது லஞ்சம் வாங்கியிருக்கலாம். அவர் யார் என்று சொல்லுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்’ என்கிறார். அப்போது அவரிடமே, ஏங்க உங்களுக்கு பங்கு வராம அவங்க வாங்கிடுவாங்களா? என்று அமைச்சரிடம் கேட்க முடியுமா? ஆனால் நான் கேட்டேன். அதற்காக பழியை அரசு மீது போட்டு, திரையுலகுக்கு வக்காலத்து வாங்கவில்லை. திரையுலகினர் வெறும் வியாபாரி. பயம் காரணமாகத்தான் அவன் கொடுக்கிறான். அது துணிந்து கொடுப்பது அல்ல. என்னை போல எத்தனை பேர் துணிச்சலாக பேசமுடியும்?

கேள்வி: தமிழ் பட உலகில் கருப்பு பணம் புழங்கவில்லை என்று சொல்கிறீர்களா?

கமல்: அப்படி சொல்லவே இல்லையே. நான் வாங்கவில்லை என்று சொன்னதில் இருந்தே உங்களுக்கு புரிந்து இருக்கவேண்டும். என்னை போல ஏதாவது ஒரு அமைச்சரை சொல்லசொல்லுங்கள். ‘நான் ஒழுங்காக இருக்கிறேன், என் மீது வழக்கு இல்லை. சாதி எனக்கு முக்கியம் அல்ல. ஓட்டு விளையாட்டில் சாதியை கொண்டு வந்தது இல்லை. என் வாழ்க்கை நேர்மையானது. நேர்மைக்காக போராடிக்கொண்டு இருக்கிறேன். கமல்ஹாசனுடன் பேச தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லச்சொல்ல முடியுமா? அப்படி பேசி யாராவது ஒரு அமைச்சர் என் முன்பு வரமுடியுமா? அப்படி யாராவது உண்மையானவராக இருந்து, என் முன்னால் வந்தால் அவர் தான் என் தலைவர். அப்படி யாரும் தமிழகத்தில் ஏன், இந்தியாவிலேயே இல்லை.

கேள்வி: வெறும் குற்றச்சாட்டு தானே?.

கமல்: ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் சொல்வதைத்தானே நான் சொன்னேன். மக்கள் மட்டுமல்ல. ஊடகங்கள் பட்டியல் போட்டு வெளியிடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் வழங்கப்பட்டதை நடக்கவே இல்லை என்று சொல்கிறீர்களா?. அது ஊழல் இல்லையா?

கேள்வி: இந்த கேள்வி மிகவும் நேரடியானது. நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பிப்பாரா?.

கமல்:- ஒரு கட்சி ஆரம்பிக்க எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். ஆனால், இப்போதுள்ள நிலையில், நேர்மையாக வெள்ளைப் பணத்தை வாங்கி அரசியல் செய்யலாம் போல் இருக்கிறது. பண்ண வாய்ப்பு உண்டு. அதனால், நான் அரசியலுக்கு வருவேனா? என்று கேட்காதீர்கள்.

இந்த மாதிரி பிரச்சினை வந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எனக்கு என்னவென்றால், என்ஜினீயரிங் படித்த ஒருவர் பொதுப்பணித்துறை அமைச்சராக வர வேண்டும். சட்டம் முழுமையாக படித்த ஒருவர் சட்டத்துறை அமைச்சராக வர வேண்டும். அப்படி வந்தால், கண்டிப்பாக அந்தத் துறை முன்னேறும்.

கேள்வி:- காமராஜர் எதுவும் படிக்காமலேயே அற்புதமாக ஆட்சி நடத்தியிருக்கிறாரே?.

கமல்:- படிக்காமல் வந்தவர் தான் கலைஞர். படிக்காமல் வந்தவர் தான் சிவாஜி கணேசன். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனை விட 30 வகுப்பு அதிகமாக படித்துவிட்டாரா என்ன?. 4, 5 வகுப்புகள் அதிகமாக படித்திருப்பார்.

இனி நாம் தேட வேண்டியது தலைவர்களை அல்ல. நிர்வாகிகளைத் தான் தேட வேண்டும்.

கேள்வி: நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறாரா?.

கமல்: இன்னும் வரவில்லை. வர வைத்துவிடாதீர்கள்.

கேள்வி: நீங்கள் ஒரு விஷயத்தில் அழுத்தமாக ஈடுபடுவீர்கள். அதாவது, இறங்கினால் முழு வீச்சில் ஈடுபடுவீர்கள். அரசியலுக்கும் வந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டீர்கள்?

கமல்: இன்னும் நான் வரவில்லை.

கேள்வி: வருவதற்கான வாய்ப்பு உண்டா?

கமல்: அது நடைமுறைகளையும், சூழலையும், எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தையும் பொறுத்தது.

கேள்வி:- நிச்சயமாக இன்னொரு கட்சியில் இணையமாட்டீர்கள் என்று நம்பலாமா?

பதில்: உங்களுக்கு சுடச்சுட செய்திகள் வேண்டும் என்றால், இன்னும் சமையல் ஆரம்பிக்கவில்லை. சமைத்து முடித்ததற்கு பிறகு சுடச்சுட தோசை வரும். கட்டம் கட்டமாக நகர்த்தப்படுகிறேன்.

கேள்வி: நாமே சமைத்து சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?.

கமல்: சமையல் ஆரம்பிக்கவில்லை என்று சொல்லும் போதே அந்த முடிவுக்கான ஆரம்பம் வந்துவிட்டது.

கேள்வி: அப்படி என்றால், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் புரிந்துகொள்ளலாமா?.

கமல்: புரிந்துகொள்ளுங்கள். அந்த புரிதலை மாற்றுவதற்கான வாய்ப்புகள் வரும் என்று தான் நான் மனதிற்குள் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றும், அதற்காக அவர் கடுமையாக வேலை செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். அவர் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்ற சிந்தனை இருக்கிறது. அது சரியான நகர்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?.

கமல்: அது சரியா? இல்லையா? என்பதை நான் கண்டிப்பாக பேட்டியில் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னுடைய நண்பர் அவர். அது சரியாக இருந்திருந்தாலும், தப்பாக இருந்திருந்தாலும் அதை அவரிடம் தான் நான் சொல்வேன். ஒரு பேட்டியில் சொல்லமாட்டேன்.

கேள்வி: ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிட்டார் என்றால், அது உங்களுடைய முடிவை தள்ளிப்போடுவதாக அமையுமா?.

கமல்: இருக்கலாம். சொல்லத் தெரியவில்லை எனக்கு. அவர் ஆரம்பித்தால், அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

கேள்வி: ஒரு அரசியல் விமர்சகர் சொல்கிறார். நீங்களும், ரஜினிகாந்தும் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டால் பெரும் புரட்சியாக இருக்கும் என்று?.

கமல்: சொல்வார்கள். அது சினிமா நட்சத்திர தேர்தல் இல்லையே. சேர்ந்து நடிப்பது வேறு, சேர்ந்து கட்சியை நடத்துவது வேறு.

கேள்வி: உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு அரசு மீது புகார் சொல்கிறீர்கள். 5 ஆண்டு வரை அவர்களுக்கு ஆட்சியை கொடுத்திருக்கிறோம் அல்லவா?

கமல்: அதுவரை பட்டாக வேண்டுமா என்ன?. நான் அரசியல் சாசனத்தில் புது கருத்தை திணிக்க நினைக்கிறேன் என்று என்ன வேண்டாம்.

கேள்வி:- ஒரு குற்றச்சாட்டு வைத்த உடனேயே ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று நாம் கூறுவது சரியா?.

கமல்: முடிந்தால் பண்ணுங்கள். முடியவில்லை என்பதற்கான எல்லா ஆதாரங்களும் வந்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் சென்னை வருபவர்கள் பக்கிங்காம் கால்வாயையும், கூவத்தையும், அடையாறையும் பார்த்து கைக்குட்டையை மூக்கில் வைத்துக்கொள்வார்கள். இப்போது யாரும் அதை செய்வதே இல்லை. ஏனென்றால், பழகிப்போய்விட்டது. அதில் இருந்து மாறுவதற்கு யாராவது ஒருவர் சத்தம் போட வேண்டும்.

கேள்வி:- இதற்கு என்ன தீர்வு?

கமல்: என்னுடைய இந்த வாதம், என்னுடைய இந்த கோபம், மக்களுடைய கொந்தளிப்பு, அதற்கு ஒரு பதிலை சட்ட வல்லுநர்களை வைத்து தேடிப்பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.

மார்க்கண்டேய கட்ஜூ என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. அந்த அளவுக்குக்கூட நான் போகவில்லை. ஆனால், மாற்றம் வேண்டும் என்பதில் மாற்றமே கிடையாது.

கேள்வி: இந்த ஆட்சி தானாகவே கலைந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. அதற்கு கட்சியில் உள்ள உள்கட்சி பிரச்சினை காரணமா?.

கமல்: கண்டிப்பாக அது தான் காரணம். நான் பெரிய அரசியல் ஞானியாக இதை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.

கேள்வி: அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?.

கமல்: இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினிக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று நான் சொல்வேனா?. அல்லது கமலுக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று ரஜினி சொல்வாரா?, சொல்லப்போவதில்லை.

கேள்வி: நீங்கள் வேதனைப்படுகிற இந்த ஊழலுக்கும், இந்த முறைகேடுகளுக்குமான தீர்வாக தி.மு.க. இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?.

கமல்: இருக்க முடியும். ஏன் அ.தி.மு.க.வாலேயே முடியும் என்று சொல்கிறேன். ஏன் தி.மு.க.வால் முடியாது. அந்த மாற்றத்தை அவர்கள் விரும்ப வேண்டாமா?.

கேள்வி: தி.மு.க.வும், இதர கட்சிகளும் நல்லாட்சியை தர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?.

கமல்: முடியும். பண்ணலாம். இருக்க வைக்க வேண்டும். அது தான் நம்முடைய கடமை. ஊடகமா அது உங்களுடைய கடமை. மக்களாக, கமல்ஹாசனாக என்னுடைய கடமை. திடீரென்று என்னுடைய வீரத்தை எங்கிருந்து பாராட்டுகிறார்கள். எப்போது வந்தால் என்ன?. அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கேள்வி: உங்களுடைய பலத்தை நாமே பரிசோதித்து பார்ப்போம் என்றோ, மற்றவர்களுக்கு காட்டுவோம் என்றோ ஒரு முயற்சியை நீங்கள் பண்ணியிருக்கிறீர்களா?.

கமல்: பலத்தை அடித்து பிடித்து காட்டுவதற்கு வந்து மறுபடியும் காந்தியை சுடுவதுபோல் ஆகும்.

கேள்வி: அரசியலை ஒரு கை பார்த்துவிடுவது என்று கமல் முடிவு செய்துவிட்டாரா?.

கமல்: அமைதியாக இருக்கக்கூடாது என்பது என்னுடைய கடமை.

கேள்வி: அப்படி என்றால் வாருங்கள் குரல் கொடுப்போம் என்பது கமல்ஹாசனின் ஒரு வரி தகவலா?

கமல்: குரல் கொடுப்போம். அதாவது சாத்தியம் என்பது சொல் அல்ல. செயல்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Dmk Kamal Haasan Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment