‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை’... 'குதிரை பேர' ஆட்சிக்கு முடிவு வேண்டும் : மு.க ஸ்டாலின்

அறிவிக்கப்பட்ட "தொலைநோக்கு திட்டம்-2023" அயர்ந்து தூங்குகிறது.

தொழில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதற்கு ‘நிலையில்லா ஆட்சியும்’, அதிமுக ஆட்சியில் தொழில் தொடங்க பேசப்படும் பேரங்களும்தான் காரணம் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக உற்பத்தித்துறை 2016-17 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது”, என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியும், தொழில் முதலீடுகளும் எப்படி மோசமான பாதையில் பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு, இந்த அறிக்கை மிக முக்கியமான சான்றாவணமாகத் திகழ்கிறது. முதலீடு செய்ய வந்தவர்கள் வெளியேறுகிறார்கள், ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன என்ற நிலையில்தான், இப்படியொரு அறிக்கை ரிசர்வ் வங்கியிலிருந்து வெளிவந்திருக்கிறது.

அறிவிக்கப்பட்ட “தொலைநோக்கு திட்டம்-2023” அயர்ந்து தூங்குகிறது. அத்திட்டத்தின் படி முதலீடு செய்யப்போவதாகச் சொன்ன ரூ.15 லட்சம் கோடி ‘வெற்று அறிவிப்பாகவே’ இருக்கிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ‘அதோ கதி’ நிலைக்கு வந்து விட்டன. ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் கிடைக்கப் போகிறது என்று சொன்னக் கணக்கு, ‘ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதாவது’, என்ற நிலையை எட்டிவிட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் 2016-17-ம் வருடத்தில் வெறும் 1.65 சதவீத வளர்ச்சியை மட்டுமே உற்பத்தி துறையில் பெற்று தமிழகம் வரலாறு காணாத அளவிற்கு, தொழில் வளர்ச்சியில் ‘மிகப்பெரிய வீழ்ச்சியை’ அதிமுக ஆட்சியில் சந்தித்து இருக்கிறது.

இத்தனை மோசமான நிலையில், வளர்ச்சிப் பாதையில் நகராமல் அமர்ந்து கொண்டிருக்கும் அதிமுக அரசின் சார்பில்தான் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தப் போகிறோம் என்று ‘பகட்டு’ அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் மூன்றாவது தென் மாநில மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “உற்பத்தி துறையில் சிறப்பான வளர்ச்சி காணும் வகையில் முதலீட்டுக்கு தேவையான உகந்த சூழல் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது”, என்று கூறியிருக்கிறார்.

இப்படிப் பேசிய முதலமைச்சருக்கு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி குன்றிப் போனதும், குறிப்பாக உற்பத்தி துறையிலேயே மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருப்பதும் தெரியாமல் போனது கவலையளிக்கிறது.

உற்பத்தி துறையில் ஆந்திர மாநிலம் 10.36 சதவீத வளர்ச்சியும், தெலுங்கானா மாநிலம் 7.1 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ள நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் பேசி இருப்பது, தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழகத்திற்கு பெருத்த தலைகுனிவை தேடித் தந்துள்ளது.

தொழில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதற்கு ‘நிலையில்லா ஆட்சியும்’, அதிமுக ஆட்சியில் தொழில் தொடங்க பேசப்படும் பேரங்களும்தான் காரணம் என்பது ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை’, என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.

“தமிழகம் தொழில்துறையில் முதலிடம்”, என்ற பல்லவியைப் பாடி, புதிதாக தொழில் தொடங்க வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகள் குறித்த “வெள்ளை அறிக்கை” வெளியிடவும் மறுத்து, சட்டமன்றத்திற்கும் தொழில் வளர்ச்சி குறித்த உண்மை தகவல்களை தர இந்த அரசு மறுப்பது ஜனநாயக விரோத செயல் மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையில்லாத செயல் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதிமுக-விற்குள் பதவிக்கு நடக்கும் அடிதடிகள், டெண்டர்களுக்கும், நியமனங்களுக்கும் நடக்கும் வசூல்கள், கரைபடிந்து போன கமிஷன் கலாச்சாரங்கள், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைப்பாடு போன்றவை தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அதிமுக ஆட்சியில், குறிப்பாக இந்த “குதிரை பேர” ஆட்சியில் அதள பாதாள வீழ்ச்சியின் விளிம்பிற்கே சென்றுவிட்டது.

அலங்கோலமான நிர்வாகம், சர்வாதிகாரமான சட்டமன்றம், ஊழலில் புரையோடிக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் என்று படுமோசமான நிலையில் நடைபெறும் இந்த அதிமுக அரசுக்கு எதிராக மக்கள் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே உற்பத்தித் துறையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழில் துறையிலும் தமிழகம் இந்த ‘குதிரை பேர’ ஆட்சியில் பின்னுக்குப் போய், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை மிக மோசமாக பாதித்துள்ளது. ஏற்கனவே ரூ.5 லட்சம் கோடி கடனில் இருக்கும் மாநிலத்தின் பொருளாதாரத்தையும், நிதி நிலைமையையும் மோசமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் ஆட்சியில் இருக்கப் போகின்ற எஞ்சிய நாட்களிலாவது தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுக்குமா என்றால் அதற்கு வழியும் இல்லை, வாய்ப்பும் இல்லை.

ஆகவே அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பின்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கும் இந்த ‘குதிரை பேர’ ஆட்சி முடிவுக்கு வருவது மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்க முடியும். அந்தப் பணியை ஜனநாயக முறையில் செய்து முடிக்க மக்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close