ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம்

போதிய ஆதாரங்கள் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டியது தானே என சிபிஐ-யிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, போதிய ஆதாரங்கள் இருந்தால் கைது செய்ய வேண்டியது தானே என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத கார்த்தி சிதம்பரம், அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக (அவரை தேடப்படும் நபராக அறிவித்து) அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை, சிபிஐ அறிவுறுத்தலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமை அலுவலகம் பிறப்பித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் மீது இந்த லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்தார். அரசியல் காரணங்களுக்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, கார்த்தி சிதம்பரம் மற்றும் நால்வர் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 14-ம் தேதியன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு (இன்று) நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டியது தானே என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், கார்த்திக்கு எதிராக ஆதாரம் இருந்தாலும் விசாரணை நடந்து வருவதால் கைது நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.

மேலும், சிபிஐ முன் ஆஜராவதில் தயக்கம் கட்டுவது ஏன் என கார்த்தியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க கார்த்தி சிதம்பரம் சம்மதம் தெரிவித்தார். ஆனால், கார்த்தியின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வருகிற 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவிட்டது.

×Close
×Close