Advertisment

வன விலங்குகளை காக்க தவறும் சென்னை ஐஐடி: வனத்துறை கடும் எச்சரிக்கை

வன உயிரினங்களை காக்கத் தவறினால் அனைத்து விலங்குகளையும் கிண்டி வன விலங்குகள் பூங்காவுக்கு இடமாற்றம் செய்ய நேரிடும் என வனத்துறை எச்சரிக்கை

author-image
Nandhini v
Oct 10, 2017 15:48 IST
New Update
chennai IIT, wild animals, environment activist, National green tribunal,

ஐ.ஐ.டி. வளாகத்தில் வாழும் வன உயிரினங்களை காக்கத் தவறினால் அனைத்து விலங்குகளையும் கிண்டி வன விலங்குகள் பூங்காவுக்கு இடமாற்றம் செய்ய நேரிடும் என ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

சென்னை ஐஐடி வளாகம், கலை மான்கள், புள்ளி மான்கள், காட்டு பூனைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கிறது. ஆனால், வன உயிரிகள் வாழ்வதற்கான சூழலை ஐஐடி வளாகம் மெல்ல மெல்ல இழந்து வருவதாக வன விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வளாகத்தில் வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் விலங்குகள் அதிகரித்துவரும் அதேவேளையில், ஐஐடியில் வருடந்தோறும் நடத்தப்படும் சாரங், ஷாஸ்திரா கலை நிகழ்ச்சிகளின்போது ஏற்படும் ஒலி மாசுபாடு, அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் அவை அதிகம் உயிரிழக்கின்றன.

இந்நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, தேசிய பசுமை தீர்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளமெண்ட் ரூபின் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சென்னையில் 236 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஐஐடி வளாகத்தில் கலை மான்கள், புள்ளி மான்கள், குள்ள நரிகள், காட்டு பூனைகள் உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்கள் உள்ளன. மேலும் 40 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளன.

அந்த வளாகத்தில் வசிக்கும் 1300 குடும்பங்கள், 8 ஆயிரத்து 500 மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் இயங்கும் 10 உணவகங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படும் குப்பைகள், அப்பகுதியில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளால் உருவாகும் குப்பைகள், குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் அங்கேயே கொட்டப்படுகின்றன.”, என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த குப்பைகளை உண்பதாலும், உணவுக்காக வரும் நாய்கள் கடிப்பதாலும், அங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் கலாச்சார விழாக்களுக்கு வரும் வாகனங்களில் சிக்கியும் 21 மான்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதனால், ஐ.ஐ.டி. வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கவும், குப்பைகளை முறையாக அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார். மேலும், விழாக்களை வேறு இடத்தில் நடத்தவும், அங்கு விலங்குகள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்னிலையில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் நசிமுத்தின் தாக்கல் செய்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கிண்டி தேசிய பூங்காவை ஒட்டியுள்ள கிண்டி காப்புக்காடு பகுதியில் இருந்து, ஐஐடி வளாகம் கடந்த 1961-ல் விடுவிக்கப்பட்டு விட்டது. ஐஐடி வளாகத்தில் வாழும் கலை மான்கள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன. தமிழ்நாடு வனத்துறை புள்ளிவிவரப்படி, கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஐஐடி வளாகத்தில் கலை மான், புள்ளி மான், குள்ள நரி உள்ளிட்ட 517 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிண்டி தேசிய பூங்காவின் வன அதிகாரியும், வாரந்தோறும், ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததில், அப்பகுதியில் உருவாகும் குப்பைகள் வகை பிரித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்படுகிறது. மக்கும் குப்பைகளைக் கொண்டு அங்கேயே இயற்கை உரமும் தயாரிக்கப்படுகிறது. சில இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளும் வீசப்பட்டிருந்தன.

வனத்துறை ஐ.ஐ.டி. வளாகத்திற்கு அளித்த பரிந்துரைகள்:

-உடனடியாக ப்ளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்ற வசதிகள் செய்ய வேண்டும்.

-ஐஐடி வளாகத்துக்குள் அனைத்து வசதிகளுடன் கூடிய விலங்குகள் நல மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்

-விலங்குகள் நடமாடும் இடங்களில் அடையாள அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும்.

-வளாகத்தில் உள்ள வன உயிரினங்களைக் காக்க உடனடியாக மேலாண்மைத் திட்டத்தை வகுக்க வேண்டும்

-வன உயிரினங்கள் வாழ தகுதியான இடமாக அந்த வளாகம் உள்ளதா என்ற ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்

என, வனத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஐ.ஐ.டி நிர்வாகம் இந்த பரிந்துரைகளை நிறைவேற்ற தவறினால், வளாகத்தில் உள்ள அனைத்து விலங்குகளையும் கிண்டி வன உயிரின பூங்காவிற்கு மாற்ற நேரிடும் என எச்சரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, வழக்கு மீதான விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மனுதாரர் ஆண்டனி கிளெமண்ட் ரூபின் என்பவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் பெருகி வரும் விலங்குகளின் இறப்புக் குறித்து விளக்கம் அளிக்குமாறு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவிற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் கடந்த மே மாதம் விளக்கம் அளித்தது. அதில், 2 ஆண்டுகளில் மட்டும் 220 மான்களும், 8 கறுப்பு நிற இன மான்களும் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

”இந்த வழக்கில் ஏற்கனவே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவில், சென்னை ஐஐடி வளாகத்தில் 2006-க்கு பிறகு கட்டப்பட்ட எந்த கட்டடங்களுக்கும் சி.டி.இ. எனப்படும் அனுமதியை ஐஐடி நிர்வாகம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை வாங்காமலேயே கிட்டத்தட்ட 10 கட்டடங்கள் ஐஐடியில் கட்டப்பட்டுள்ளன. அதுதவிர அந்த கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ. அனுமதியும் பெறப்படவில்லை. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்தும் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு, தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி எல்லாமும் தான் காரணம்”, என மனுதாரர் ரூபின் கூறுகிறார்.

மேலும், சாஸ்திரா, சாரங்க் விழாக்களின்போது பல்வேறு இடங்களிலிருந்து வரும் மாணவர்கள் வருவதால் திடக்கழிவுகள் அதிகரிப்பதாகவும், அவர்கள் வேகமாக வாகனங்களை இயக்குவதால் அதில் சிக்கி மான்கள் உயிரிழப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

“2014-ஆம் ஆண்டில் நடந்த சாரங் விழாவின்போது மட்டுமே 27 மான்கள் இறந்துள்ளன என ஐஐடி மாணவர்களே சொல்லியிருக்கின்றனர்”, ரூபின்.

“வனத்துறை நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், 2010-ஆம் ஆண்டிலிருந்து இந்தாண்டு வரை 517 விலங்குகள் உயிரிழந்துள்ளன என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக வனத்துறை கூறவில்லை.”, என ரூபின் கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment