சென்னை ஐஐடி மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வது தொடர்பாக மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐஐடி-யில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐஐடி மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வலது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐஐடி மாணவர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியதாவது: ஐஐடி மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகள் விற்பனை குறித்த மத்திய அரசின் புதிய ஆணையின் மீது தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார்.