சென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை! காரணம் என்ன?

ஷஹலின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது

சென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை: சென்னை ஐஐடியில் பெருங்கடல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவர் இன்று (செப்.22) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், பெருங்கடல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் படித்து வந்தவர் ஷஹல் கொர்மத். வயது 23.

கேரளாவைச் சேர்ந்த ஷஹல், கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை ஷஹலின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. அவரது நண்பர் கதவைத் தட்டியும், உள்ளேயிருந்து பதில் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஹாஸ்டல் வார்டன் ரகுராம் ரெட்டி உடனடியாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்த போது, அறையின் சீலிங் ஃபேனில் ஷஹல் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

கேரள மாணவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

அறையை சோதனை செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஏதும் சிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஷஹலின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், கல்லூரியில் குறைந்த வருகைப் பதிவு இருந்த காரணத்தால், இறுதித் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி ஷஹல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தான், ஷஹலின் குறைவான வருகைப் பதிவு விவரம் குறித்து அவருடைய பெற்றோருக்கு கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஷஹல் தனது விடுதி அறையில் தற்கொலை செய்திருக்கிறார். இருப்பினும், இவ்விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close