இறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி திருவிழா நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த இந்த மாட்டுக்கறி திருவிழாவில் கிட்டத்தட்ட 50 மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல் வெளிளயாகியுள்ளன.
முன்னதாக, கேரள மாநிலம் கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸை சேர்ந்த ரிஜில் மகுல்டி என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
"கேரளாவில் நடந்த இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது எனக்கோ எந்தவிட உடன்பாடும் இல்லை. இது சிந்தனையற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல். இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கூறும்போது: கேரளாவில் நிகழ்ந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிததார். உணவு பழக்கவழக்கங்களை எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்து கேரள மக்களுக்கு தெரியும். அதனை டெல்லி மற்றும் நாக்பூர் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள அவசியம் இல்லை என்றும் பிரனாயி விஜயன் பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்திருந்தார்.