இளையராஜாவுக்கு 3 மொழிகளில் ஜனாதிபதி வாழ்த்து: ‘இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்’

இளையராஜாவுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது கையால் பத்மவிபூஷன் விருது வழங்கிய படத்தையும் பெருமிதத்துடன் பதிவிட்டிருக்கிறார் ராம்நாத் கோவிந்த்.

இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார். ‘இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்’ என புகழ்ந்தார்.

இசைஞானி இளையராஜா இன்று (மே 2) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு நாடு முழுவதும் இருந்து பிரபலங்களும், இசைஞானியின் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

இளையராஜாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வாழ்த்து தெரிவித்து தனது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில், ‘இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறேன்’ என தமிழில் பதிவு செய்திருக்கிறார்.

இளையராஜாவுக்கான இந்த வாழ்த்துச் செய்தியை இதே பொருள்பட இந்தியிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக ரம்நாத் கோவிந்த் பதிவு செய்திருக்கிறார். இந்த வாழ்த்துச் செய்தியுடன் இளையராஜாவுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது கையால் பத்மவிபூஷன் விருது வழங்கிய படத்தையும் பெருமிதத்துடன் பதிவிட்டிருக்கிறார் ராம்நாத் கோவிந்த்.

இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நன்றி தெரிவித்து அவரது டிவிட்டர் பக்கத்திலேயே பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 

×Close
×Close