குட்கா விற்பனையில் அமைச்சர், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு : அறிக்கை கேட்கிறார் கவர்னர்

குட்கா விற்க லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட, டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு டிஜிபியாக பதவி உயர்வு கொடுக்க அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

சென்னை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்க அமைச்சர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரையில் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டுள்ளார்.

சென்னை அடுத்த மாதவரத்தில் வருமான வரித்துறையினர் கடந்த 2016ம் ஆண்டு சோதனை நடத்தினார்கள். அப்போது குட்கா வியாபாரியின் டைரி மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்த போது, அமைச்சர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்ததாக கணக்கு எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர், தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதினார்கள். தலைமை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இன்று வரையில் வழக்கு பதிவு செய்து விசாரித்ததாக தகவல் இல்லை.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றும், டிவி சேனல் ஒன்றும் இது குறித்து முழு தகவல்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரவையில் எதிர்கட்சி தலைவர் இந்த பிரச்னையை எழுப்பினார். முதல் நாள் பேச அனுமதி மறுத்த சபாநாயகர், அடுத்த நாள் அனுமதி கொடுத்தார். முதல்வரின் பதிலில் திருப்தி அடையாத எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் குட்கா விற்க லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட, டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு டிஜிபியாக பதவி உயர்வு கொடுக்க அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், ‘குட்கா விற்பனை செய்ய அமைச்சர், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாடு தொடர்பாக அறிக்கை தருமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close