கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. மாநகரப் பகுதிகளிலும், புறநகர பகுதிகளிலும் ஆங்காங்கே தொடர் கனமழையும் மிதமான மலையும் பதிவாகி வருகிறது.
குறிப்பாக பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைகள் மற்றும் நொய்யல் நதியில் அதிகளவு நீர் செல்ல துவங்கி உள்ளது. இதனால், நீர் நிலைகளில் அருகே வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் கோவை குற்றாலம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 17) காலை முதல் நகர மற்றும் புறநகர பகுதிகளில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இரவு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“