இமானுவேல் சேகரனின் 60-ம் ஆண்டு நினைவு தின குருபூஜையில் கலந்து கொண்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வேதநாயகம், ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் இமானுவேல் சேகரன். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்த இமானுவேல் சேகரன், சமூக சேவைச் செய்யும் நோக்கில் ராணுவப் பணியை துறந்தவர்.
தனது 19-வது வயதில் அருப்புக்கோட்டையில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இரட்டை குவளை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமுறையை சமூகத்திலிருந்து அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இமானுவேல் சேகரன், 1957-களில் முதுகுளத்தூரில் நடந்த சாதி கலவரத்தை தொடர்ந்து நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற இவர், 1957-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரமக்குடியில் ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இமானுவேல் சேகரனின் 60-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. நினைவிடத்தில் இமானுவேல் சேகரனின் குடும்பத்தினர், அஞ்சலி செலுத்தி முதல் மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் தமிழக அமைச்சர்கள் சரோஜா, ராஜலெட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்ட ஏராளமான ஆதிமுக-வினர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தமிழரசி, சத்தியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் திவாகரன் உள்ளிட்ட ஏராளமான திமுக-வினர் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர், மதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சதன் திருமலைக் குமார், பூமிநாதன், மாவட்டச் செயலாளர் குணா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிகின்றன.