சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த வழக்கு, முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென்னுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் .
முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையான சுஷ்மிதா சென் கடந்த 2005ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லேண்ட்- க்ரூஸர் காரை 55 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால் அந்த கார் 2004ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என சென்னை துறைமுகத்தில் கணக்கு காட்டி இறக்குமதி செய்ததோடு வரி ஏய்ப்பு செய்திருப்பதையும் சுங்க இலாகா துறையினர் கண்டு பிடித்தனர். இதனையடுத்து இதுதொடர்பாக அந்த காரை விற்பனை செய்த, மும்பையைச் சேர்ந்த ஹரன் மற்றும் வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்காக சுங்க இலாகா தரப்பு சாட்சியமாக நடிகை சுஷ்மிதா சென்னை நேரில் ஆஜராகி பழைய கார் (used car) என்றே வாங்கியதாகவும், அதில் நடந்த மோசடி எதுவும் தனக்கு தெரியாது எனவும், ஆனால் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சுங்க இலாகா தெரிவித்ததையடுத்து 20.31லட்ச ரூபாய் வரி செலுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சுஷ்மிதா சென்னிடம் குறுக்கு விசாரணை செய்யவதற்காக நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தவிட்டு ஆஜராகாததால், சிஷ்மிதா சென்னுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டை எதிர்த்து சுஷ்மிதா சென் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஏற்கெனவே தான் வாங்கிய சொகுசு காருக்கான வரி தொகை 20.31 லட்சம் செலுத்தி விட்டதால், இந்த வழக்கில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக பிறப்பித்த வாரண்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மறு உத்தரவு வரும்வரை சுஷ்மிதா சென்னுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.