நயினார் நாகேந்திரன் உள்பட 3 பேர் அதிமுகவில் இருந்து பாஜக.வுக்கு தாவினர். இதனால் அதிமுக அணிகள் அதிர்ச்சியில் உறைந்தன.
கடந்த முப்பது ஆண்டுகளாக அதிமுக.வை கட்டிக் காத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அதன்பிறகு கடந்த 8 மாதங்களாக அதிமுக.வில் நடக்காத கூத்துகள் இல்லை. முதலில் ஓ.பி.எஸ். முதல்வரானார். அடுத்து அவரை கவிழ்த்துவிட்டு, சசிகலா முதல்வர் பதவி ஏற்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் அவரது பதவி ஏற்பை ஆளுனரே சில நாட்கள் தாமதப்படுத்தினார். அதற்குள் எதிர்பார்த்த மாதிரி, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார் சசிகலா.
சிறை செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. அதே சசிகலாவை இப்போது கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க, எடப்பாடி காய் நகர்த்தி வருகிறார். அப்போது பிரிந்திருந்த ஓ.பி.எஸ்., இப்போது எடப்பாடியுடன் கைகுலுக்கி துணை முதல்வர் பதவியை பிடித்திருக்கிறார். இதனால் டிடிவி.தினகரன் தனி அணியை உருவாக்கி ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதிமுக நிர்வாகிகள் தினம் ஒரு அணியாக, ஆலவட்டம் சுற்றினாலும் அந்தக் கட்சியின் தொண்டர்கள் சலனமே இல்லாமல் பார்வையாளர்களாகவே காட்சி தருகிறார்கள். இதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒரு விஷயம், அதிமுக நிர்வாகிகளோ, கிளைச் செயலாளர்களோ, சாதாரண தொண்டர்களோ கூட இதுவரை மாற்றுக் கட்சிகளை தேடிச் செல்லவில்லை. அணிகளின் குழப்பம் ஓய்ந்த பிறகு, ஒருங்கிணைந்த அதிமுக.வில் தொடரும் திட்டத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில்தான் நெல்லையை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.வில் ஐக்கியமாக இருப்பதாக சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது. நயினார் இதை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வரும்போது சேரும் திட்டத்தில் அவர் இருந்தார். ஆனால் அமித்ஷா வருகை தள்ளிப்போனதால், ஆகஸ்ட் 26-ம் தேதி (இன்று) டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தன்னை பாஜக.வில் இணைத்துக் கொண்டார் அவர்.

அவருடன் வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆகியோரும் ஐக்கியமானார்கள். இந்த இணைப்பு தமிழகத்தில் அதிமுக.வின் அத்தனை அணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக.வின் இரு அணிகளாக இயங்கிய எடப்பாடி தரப்பையும், ஓ.பி.எஸ். தரப்பையும் இணைத்து வைத்ததே பிரதமர் மோடிதான் என ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது. கடைசியாக ஓ.பி.எஸ். டெல்லியில் மோடியை சந்தித்து திரும்பியபோது, ‘தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியதாக’ மீடியாவிடம் கூறினார். அதேபோல அமைச்சர் ஜெயகுமார் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நல்ல நோக்கத்துடம் அதிமுக இணைய மோடி உதவினால் தப்பில்லை’ என்றார்.
ஆனால் அதே பாஜக, தற்போது அதிமுக.வின் முக்கிய நிர்வாகிகளை இணைக்க ஆரம்பித்திருப்பதுதான் ஷாக்! பொதுவாக அரசியலில் இணக்கமாக அல்லது கூட்டணியாக இருக்கும் கட்சியின் நிர்வாகிகளை இன்னொரு கட்சி சேர்த்துக் கொள்வதை முடிந்தவரை தவிர்ப்பது வழக்கம்! காரணம், அப்படி சேர்ப்பதால் இரு கட்சிகள் இடையிலான உறவு வலுவிழக்கும் என்பதே! ஆனால் அதிமுக.வுடன் இணக்கமாக இருந்து அந்தக் கட்சியின் அணிகளை இணைத்து வைத்ததாக பேசப்படும் பாஜக, அப்படி எந்த பார்மாலிட்டியையும் பின்பற்றாமல் அதிமுக வி.ஐ.பி.க்களை வளைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றிருக்கிறது.
‘அதிமுக அணிகள் எதுவாக இருந்தாலும், பாஜக.வின் கண் அசைவுப்படியே நடக்க இருக்கின்றன. அதற்கு பதிலாக நேரடியாக பா.ஜ.க.வில் சேர்ந்து வேட்பாளரானால், கூட்டணி தர்மத்திற்காக இதே அதிமுக தொண்டர்கள் தேர்தல் பணி ஆற்றவே செய்வார்கள். எனவே அதிமுக.வில் நீடிப்பதைவிட பா.ஜ.க.வில் இணைவது நல்லது’ என அடுத்தடுத்து பல வி.ஐ.பி.க்கல் சிந்திக்க ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. பல சவால்களுக்கு மத்தியில், அதிமுக.வுக்கு இது புதிய சவால்!