”முறைகேட்டை ஒப்புக்கொண்டார் விஷால்”: ஐடி ரெய்டு குறித்து வருமான வரித்துறை விளக்கம்

ரூ.50 லட்சம் மதிப்பிலான தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற தகவலின் அடிப்படையிலேயே, நடிகர் விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

actor vishal, it raid, nadigar sangam, producer council,

வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, ரூ.50 லட்சம் மதிப்பிலான தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற தகவலின் அடிப்படையிலேயே, நடிகர் விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வடபழனி பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள விஷாலின் அலுவலகத்தில், கடந்த 23-ம் தேதி ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், சிறிது நேரத்திலேயே, விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. சோதனை நடத்தப்படவில்லை என, சென்னை மண்டல ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு இணை இயக்குநர் ராஜசேகர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், 23-ம் தேதி விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் தான் சோதனை நடத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, விஷாலின் பெயரை சுட்டிக்காட்டாமல் வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது,

“ஊதியம் வழங்கும் இடத்தில் பிடித்தம் செய்யப்படும் வரியானது, ஒழுங்காக வருமான வரித்துறைக்கு செலுத்தப்படுகிறதா என, அவ்வப்போது பல இடங்களில் சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதன்படிதான், திங்கள் கிழமை தயாரிப்பாளர் அலுவலகமொன்றில் சோதனை நடைபெற்றது. மேற்படி நபர், கடந்த 2016-2017-ஆம் ஆண்டில் வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, ரூ.50 லட்சம் மதிப்பிலான தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற தகவலின் அடிப்படையிலேயே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

வருமான வரி சட்ட விதிகளின்படி, பிடித்தம் செய்யப்பட்ட வரி ஏழு நாட்களுக்குள் வருமான வரித்துறையிடம் செலுத்த வேண்டும். அதன்படி, மேற்படி நபர் முறைகேட்டை ஒப்புக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை உடனடியாக செலுத்துவதாக உறுதியளித்தார்”, என கூறப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் வெளியான திரைபடத்திற்கும், தயாரிப்பாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Income tax department clears air on inspection at actor vishals office

Next Story
கன்னியாகுமரி அம்மா உணவக சாம்பாரில் பல்லி : இட்லி-சாம்பார் சாப்பிட்ட பெண்ணுக்கு சிகிச்சைkanyakumari district, kanyakumari government medical college hospital, AMMA canteen, tamilnadu government
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express