திரைப்பட நடிகரும் சமக தலைவருமான சரத்குமார், இன்று மாலை மீண்டும் வருமான வரித்துறை அலுவலத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இவரிடம் இணை ஆணையர் தலைமையிலான டீம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஜெயலலிதா இறந்ததும், அவர் ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு ஆதரவளித்தார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்ட நிலையில், திடீரென அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 'திடீர்' சோதனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் சரத்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்ய பணம் பெற்றதாகவும், அதைத் தொடர்ந்தே அவர் வீட்டில் சோதனை நடந்ததாகவும் சொல்லப்பட்டது. ஏற்கனவே, சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் இன்றும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சேகர் ரெட்டி தரப்பினர் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு, வருமான வரித்துறையினர் கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் சரத்குமாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. எனவே சேகர் ரெட்டி விவகாரத்தில் சரத்குமாருக்கு தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.