சென்னை, பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 33 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 1800 அதிகாரிகள் ஈடுபட்டனர். பல்வேறு முக்கிய ஆவணங்கள் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், சென்னை - பெரம்பூரில் அமைந்துள்ள ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர் வீடு உள்ளிட்ட 33 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமின்றி, மதுரையிலும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. எதற்காக இந்த சோதனை என தெரியவில்லை. இவர்கள் மார்க் என்ற குழும நிறுவனத்தையும், கங்கா ஃபவுண்டேஷனையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் மால் மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள வருமான வரித்துறையினர், விசாரணைக்காக மால் பொறுப்பாளர் சிட்டி பாபுவை அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, இந்த சோதனை சத்யம் சினிமாஸ் அலுவலகங்களில் நடந்து வருவதாக தவறான தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.