முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அவ்வப்போது வருமான வரித் துறையினர் முக்கிய புள்ளிகளின் வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அரவக்குறிச்சி எம்எல்ஏ-வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தவரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 21-ம் தேதி முதல் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
அதன்படி, கரூர் லைட்ஹவுஸ் கார்னர் திண்டுக்கல் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்களில் ஒருவரான தாரணி சரவணனின் நிதி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில், அந் நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதேபோல் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள சுவாமிநாதன் என்பவரது ஜவுளி நிறுவனம், சாயப்பட்டறை உரிமையாளர் ஒருவரது அலுவலகம், எம்ஜிஆர் மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் காண்டிராக்டர் ஆகியோர் வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை நடந்தது.
நான்காவது நாளாக நேற்றும் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வந்த நிலையில் மேற்று மாலையுடன் அந்த சோதனை நிறைவு பெற்றது.
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் கூறும்போது, கரூரில் கடந்த 4 நாட்களில் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ரூ.50 கோடிக்கும் மேலாக வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது, ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றனர்.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சோதனை நடந்த நிறுவனங்களில் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.