'செய்யது பீடி' ரெய்டு; கட்டு கட்டாக சிக்கிய நோட்டுகள்?

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டுச் செயல்படும் பிரபல பீடி தயாரிப்பு நிறுவனமான, செய்யது க்ரூப் ஆஃப் கம்பெனி, வருமான வரியை முறையாக செலுத்தாமல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்யது குரூப்புக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நெல்லையில் வண்ணார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள செய்யது பைனான்ஸ் நிறுவனம், செய்யது லாட்ஜ், மூன்றடைப்பில் உள்ள செய்யது காட்டன் மில் நிறுவனம் மற்றும் பாளை ஐகிரவுண்டில் உள்ள செய்யது குரூப் நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்றும் (ஜூன் 29) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

×Close
×Close