இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்க உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் முதற்கட்டமாக வரும் 19-ந் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குறிப்பாக 39 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப்பங்கீடு தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டியதை தொடர்ந்து தற்போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ், பா.ஜ.க – பா.ம.க, - அ.தி.மு.க. தே.மு.தி.க என முன்று கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இதில் ஒரு சில தொகுதிகளில் தி.மு.க – அ.தி.முக நேரடியாக மோதும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க – அதி.மு.க – பா.ம.க ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க தற்போது பா.ஜ.க கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதி – முதல் தேர்தல்
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளது. இதில் கடந்த 2008-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் என கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகள், கங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர் என சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 தொகுதிகள் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இந்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பிரிக்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதி 2009-ம் ஆண்டு முதல் நாடளுமன்ற தேர்தலை சந்தித்தது. இதில் தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க நேரடியாக போட்டியிட்ட நிலையில், தி.மு.க வேட்பாளர் ஆதிசங்கர் என்பவர் 1 லட்சத்திற்கு அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த தொகுதியில் பா.ம.க 2-வது இடத்தையும், தே.மு.தி.க 3-வது இடத்தையும் பிடித்திருந்தது. அதன்பிறகு 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் காமராஜ் 2 லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
2019 மக்களவைத் தேர்தல்
2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க, தே.மு.தி.க நேரடியாக மோதியது. இதில் தி.மு.க சார்பில், அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து தே.மு.தி.க சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிட்டார், இருவருக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 4 லட்சத்திற்கு அதிகமாக வாக்குகள் பெற்று கௌதம் சிகாமணி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எல்.கே.சுதீஷ் 3 லட்சத்திற்கு அதிகமாக வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்திருந்தார்.
2024 மக்களவைத் தேர்தல்
2024 மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில், தே.மலையரசன், அ.தி.மு.க கூட்டணியில், முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு, பா.ஜ.க. சார்பில் பா.ம.க.வை சேர்ந்த தேவதாஸ் ஆகியோருடன் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சார்பில், ஜெகதீச பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தே.மலையரசன் (தி.மு.க)
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் பகுதியை சேர்ந்தவர் தே.மலையரசன். முதுகலைபட்டம் பெற்றுள்ள இவர், வியாபாரம் செய்து வரும் நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் கிளைக்கழக செயலாளராக தனது அரசியல் பணியை தொடங்கியுள்ளார். அதன்பிறகு ஒன்றிய துணை செயலாளர், மாவட்ட பிரதிநிதி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2006 மற்றும் 2016-ம் ஆண்டு சிறுநாகலூர் மற்றும் பொறையூர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியுள்ள இவர், தியாக துருவம் ஊராட்சி ஒன்றிய தலைவர் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இந்திய மக்களவை தேர்தலில் அறிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இரா.குமரகுரு (அ.தி.மு.க)
உளுந்தூர் பேட்டை தாலுக்க ஏ.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு. சாதாரண தொண்டராக கட்சியில் இணைந்த இவர், படிப்படியாக முன்னேறி அ.தி.முக சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருநாவலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தலில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3முறை சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருந்துள்ளார்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட குமரகுரு தோல்வியை தழுவினார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த அவருக்கு அ.தி.மு.க சார்பில் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடும் வகையில்,குமரகுரு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இரா.தேவதாஸ் (பா.ம.க)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான இரா.தேவதாஸ் உடையார் கடந்த ஆண்டு திடீரென பா.ம.க.வில் இணைந்தார், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் பகுதியில் உள்ள டாக்டர் ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்த தேவதாஸ் தன்னை பா.ம.க.வில் இணைந்துகொண்ட நலையில், அவருக்கு டாக்டர் ராமதாஸ் கட்சியின் துணைத்தலைவர் பதவியும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
ஜெகதீச பாண்டியன் (நாம் தமிழர் கட்சி)
சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னையில் அரசு ஓவிய கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் திரைப்பட கல்லூரியில், திரைப்பட இயக்குனருக்கான படிப்பை முடித்துள்ள இவர், சட்டம் படித்தவர். இயக்குனர் சேரன் மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள ஜெகதீச பாண்டியன் தற்போது, நாம் தமிழர் கட்சியின் சார்பாக கள்ளக்குறிச்சி தொகுதியில் அறிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதியில் முதலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளரான இவர், தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, கங்கவல்லி, ஆத்தூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்து மொத்தமாக 15,67,937 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,73,121 ஆகவும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை, 7,94,588 ஆகவும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை 228 ஆகவும் உள்ளது. இதில் 11199 வாக்காளர்கள் 85 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது போட்டியிடும் வேட்பாளர்களில், தி.மு.க.வின் மலையாரசன், அ.தி.மு.க.வின் குமரகுரு ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள. அதேபோல் பா.ம.க.வின் தேவதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஜெகதீச பாண்டியன் ஆகிய இருவரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.