எல்லா உயிருக்கும் அன்புதான் ஆதாரம். மனிதர்களுக்கு மட்டும் அன்பு சொந்தமில்லை என்பதற்கான சாட்சியங்கள் பல இருக்கின்றன. இது மற்றுமொரு ஆதாரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யானைக்குட்டி ஒன்று தன் கூட்டத்திடமிருந்து பிரிந்து தனித்து நின்று தவித்தது. மேலும், காட்டு நாய்களிடம் சிக்கி அதனுடம்பில் காயங்களும் ஏற்பட்டன.
அந்த யானைக் குட்டியை பொம்மன் என்ற பாகன் மீட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அழைத்து வந்தார். அன்றைய நாளிலிருந்து அந்த யானைக்குட்டியை பொம்மன் இரவு பகலாக பாதுகாத்து வருகிறார். அதற்கு நேரத்திற்கு தேவையான உணவு அளித்தல் உட்பட எல்லா பணிகளையும் அன்புடன் செய்து வருகிறார். இந்த யானைக்குட்டி தற்போது பொம்மனுக்கு நிபந்தனையற்ற அன்பை வழங்கி வருகிறது.
தற்போது இருவரும் பிரிக்க முடியாதபடி ஒருவருக்கொருவர் பிணைந்துள்ளனர்.
இதுகுறித்து பொம்மன் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “நான் இந்த யானைக்குட்டியை இங்கு அழைத்து வந்ததிலிருந்து அதனிடம் நிறைய மாற்றங்களை காண்கிறேன். அதன் எடை கூடியிருக்கிறது. உற்சாகமாக உள்ளது. விளையாடுகிறது”, என கூறினார்.
இப்போது, அந்த யானைக்குட்டி நன்றாக சாப்பிடுகிறது.ஆரம்பத்தில் அதற்கிருந்த பதற்றமான உணர்வு இப்போது அதற்கு இல்லை என பொம்மன் தெரிவித்தார்.
கொஞ்ச நேரம் பொம்மன் அதனை பிரிந்து எங்காவது சென்றுவிட்டால் கூட, அந்த யானைக்குட்டி மிகுந்த வருத்தமடைவதாக பொம்மன் கூறினார்.
“நான் சாப்பிட கூட முடியாது. நான் எங்காவது சென்றுவிட்டால் சத்தம் எழுப்பி என்னை அழைத்துக்கொண்டே இருக்கும்.”, என அந்த யானைக்குட்டியின் தாயுமானவர் கூறுகிறார்.